Home செய்திகள் முல்லைத்தீவு – குடிநீர் வினியோகம் இன்றி நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள்

முல்லைத்தீவு – குடிநீர் வினியோகம் இன்றி நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள்

IMG 20210818 091110 1 முல்லைத்தீவு - குடிநீர் வினியோகம் இன்றி நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள்

குடிநீர் வினியோகத்தினை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். முல்லைதீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடக்கு மாகாண சபையினால்  நீர்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குறித்த நீர்த்தாங்கியின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 க்கு மேற்பட்ட குடும்பங்களிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க முடியும் என தெரிவித்து குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறித்த நீர் வினியோக திட்டத்திற்கான அபிவிருத்தி பணிகள், 2017ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரால் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் பிறேமகாந்தனிடம் கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்ட சிறிய காலம் குடிநீர் வினியோகம் இடம்பெற்ற போதிலும், 6 மாதங்களிற்கு பின்னர் அத்திட்டம் செயலிழந்து போனது. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாறு செயலிழந்து காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அலைந்து திரிவதுடன், பல குடும்பங்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த நீர் வினியோக திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் கிருசாந்தனிடம் வினவிய பொழுது,

குறித்த திட்டம் தமது கண்காணிப்பின் கீழ்தான் இடம்பெற்றதாகவும், பிரதேசத்தின் சனசமூக நிலையத்திடம் குறித்த திட்டம் கையளிக்கப்பட்டதாகவும், ஆனாலும் நீர் வினியோகம் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும், கடந்த வருடங்களில் இடையிடையே ஒரு மணிநேரம் குடிநீர் வினியோகம் இடம் பெற்றதாகவும், கடந்த வருடத்திலிருந்து இன்று வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர் வினியோகம் இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் கருத்துக்களுக்கு குறித்த திட்டம் நீண்ட காலமாக இடம்பெறவில்லை என்பதற்கு அங்கு பொருத்தப்பட்டுள்ள நீர் குழாய்கள் மற்றும், பாவனை கிணற்றின் நிலை சான்று பகிர்கின்றது.

“குறித்த நீர் வினியோக திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பிரதான நீர் குழாய்கள் உள்ளக போக்குவரத்து வீதிகளின் மையப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வீதிகள் அபிவிருத்தி செய்யப் பட்டுள்ளமையால் புதைக்கப்பட்ட நீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்த முயற்சித்தால் வீதியின் மைய பகுதிகளை மீண்டும் கிளற வேண்டிய நிலை ஏற்படும்.  இதனால் பெரும் நிதி செலவு ஏற்படும். எனவே திருத்தல் பணிகளை முன்னெடுக்க பிரதேச சபையினர் தயக்கம் காட்டி வருகின்றனர்” என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version