Tamil News
Home செய்திகள் இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணி துரிதப்படுத்தப்படும்-ரணில்

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணி துரிதப்படுத்தப்படும்-ரணில்

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பில் நிகழ்வொன்றில்  உரையாற்றியவர்,

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 ஆம் ஆண்டில் தாம் பிரதமராக பதவி வகித்தபோது ஆராயப்பட்டது.  ஆனால் 2023 இலும் அதனை பற்றி பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியதெனவும் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது என்பதோடு, அதனை துரிதப்படுத்துவதற்கு நிகரான பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாம் இப்போது “ஈ – வணிகம்” யுகத்திலேயே வாழ்கிறோம். இருப்பினும் எமது நாட்டிற்குள் ஈ – வணிகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தாமதமாகிவிட்டது. டிஜிட்டல் மயமாக்கலை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து அமைச்சர், செயலாளர், அதிகாரிகளுடன் நான் கலந்தாலோசித்தபோது அது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்கு பெற்றுத்தருமாறு அவர்களுக்கு பணிப்புரை விடுத்தேன்.

நாட்டிற்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அனைத்துவித முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம். இந்த செயற்பாட்டை புதிதாக அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.தென் இந்தியாவின் தமிழ் நாட்டில் இந்த திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான இணையத்தள முறைமைகள் காணப்படுகின்றன. அது தொடர்பில் நான் இந்தியாவுடன் பேச்சுக்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றேன். தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற இலங்கையில் பயன்பாட்டில் உள்ள மொழிகளே அங்கும் காணப்படுவதால் மேற்படி பணிகள் மேலும் எளிதாகும்.

வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 ஆம் ஆண்டில் தாம் பிரதமராக பதவி வகித்த போதே கூறியிருந்த போதிலும் 2023 இலும் அதனை பற்றி பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியது.அதனால் இந்த பணிக்கு நாம் எந்த அளவு காலத்தை செலவிட்டுள்ளோம் எனத் தெரிந்துகொள்ள முடியும். அதனால் ரெமிஸ் (RAMIS) போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை இவ்வருடத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதே பாராளுமன்றத்தினதும் எனதும் நோக்கமாகும். துரிதப்படுத்தும் அளவிற்கு அந்த பயணம் பயன் தருவதாக அமையும்.

டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பசுமை பொருளாதாரம் இன்று ஆசியாவின் வியாபாரச் செயற்பாடாக மாறியுள்ளது. அந்த பொருளாதாரத்தின் பெறுமதி 5 ட்ரில்லியன் ஆகும். அதனை ஆரம்பிப்பதற்கு நமக்கு 5 ட்ரில்லியன்கள் அவசியமில்லை. சில பில்லியன்கள் போதுமானது. அதனால் இந்த வேலைத்திட்டங்களோடு டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கவேண்டியது அவசியமாகும்.அதற்காக நாம் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது எனவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

Exit mobile version