Home ஆய்வுகள் காணாமல்போன மகளைத் தேடுவதா? அல்லது வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத்...

காணாமல்போன மகளைத் தேடுவதா? அல்லது வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத் தவிக்கும் தாய் | பாலநாதன் சதீஸ்

 

மகளை தேடும் தாய்

பாலநாதன் சதீஸ்

காணாமல் போன மகளை தேடும் தாய்

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட யுத்த  வடுக்கள் இன்னும்  ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருகின்றது. கடந்த யுத்தத்தில் மக்களின் உடமைகள், உயிர்கள் பல சேதமாக்கப்பட்டன. பல உறவுகள் காணாமலாக்கப் பட்டிருக்கிறார்கள். அவற்றில் யுத்த காலத்தின் போது சேதமாக்கப்பட்ட உடமைகளுக்கு இழப்பீடு உதவி வழங்கியிருக்கும் அரசாங்கம்,  ஏன் இன்னமும் காணாமலாக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்குச் சரியான தீர்வினை வழங்கவில்லை.

கடந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் இன்றுவரை எவ்வளவோ துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். தாம் ஆசையாக பெற்றெடுத்த பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும், கணவனைத் தொலைத்துவிட்டுத் தேடியலையும் மனைவிமாரும், தந்தையை, சகோதரனை தொலைத்த  எத்தனை உறவுகளும் இன்று காணாமல்போன தம் உறவுகள் வந்துவிட மாட்டார்களா? எனத் தவித்தபடி  இரவு, பகல் பாராது நடு வீதிகளிலே போராட்டப் பந்தல் அமைத்துப் போராடி வருகின்றார்கள். அவ்வாறு தான் ஆசையாக பெற்றெடுத்த தன் மகளை தொலைத்து விட்டு மகளின் வருகைக்காக காத்திருக்கும் அன்னைதான் யோகராசா கிறிஸ்ரின் புனிதசீலி. தனது சோகத்தை அவரே விபரிக்கின்றார்.

“எனது பெயர் யோகராசா கிறிஸ்ரின் புனிதசீலி. எனது கணவர்  தியாகராசா யோகராசா. நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில்  5ஆம் வட்டாரம், இரணைப் பாலை, புதுக்குடியிருப்புப் பகுதியிலே வசித்து வருகின்றோம். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். அதில் மூத்த மகள் தான் காணாமல் போனவா. எங்கட இரண்டாவது மகன்  ஒன்றரை வயதில் நெருப்புக் கிடங்கில் விழுந்ததால் அவருக்கு ஏலாது. மூன்றாவது மகள் யுத்த காலத்தில செல்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறா. நான்காவது பிள்ளை  தரம் 7 இல் கல்வி கற்கின்றார்.  என்ர கணவருக்கும் யானையடித்து ஏலாது. இப்ப நான் தான் கூலி வேலை செய்து என்ர குடும்பத்த பார்திட்டு இருக்கிறன்.

என்ர மூத்த மகள்  யோகராசா மரிய றோஜினி. இவர் யுத்த நேரம்  2009.03.18 அன்று மேற்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து காணாமல் போனவர்.  அப்போது எங்கு தேடியும் மகள் கிடைக்கல. பின்னர் முள்ளிவாய்க்காலிலிருந்து  வட்டுவாகலுக்கு வந்தனாங்கள். அதற்கு பின்பு  இராணு வத்தினர் எல்லாரையும்  பேருந்தில் ஏற்றி வவுனியா செட்டிக்குளம்  சோன் 4 அகதி முகாமில் கொண்டு போய் விட்டார்கள். முகாமில்  மட்டக்களப்பு ஆட்களை பதிவு செய்தவர்கள்.  என்ர கணவர் மட்டக்களப்பு ஆனபடியால், மட்டக்களப்பிற்கு கொண்டு போய் எங்களை  விட்டவர்கள். 2010 ஆம் ஆண்டு மட்டக்களப்பு வந்தாறு மூலையில் இருந்தனாங்கள்.  பின்னர் எல்லாரையும் அவங்கட சொந்த இடத்துக்கு  அரசாங்கம் மீள்குடியமர்த்தினவை.

நாங்களும் 2012 ஆம் ஆண்டு இரணைப்பாலை வந்தோம். இருக்க வீடு இல்லை. தற்காலிகமா சிறிய கொட்டகை அமைச்சு இருந்தம். பிறகு ஏழரை இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் தந்தவையள். அது கட்டிமுடிக்கப்படாத நிலையில் இப்போதும் இருக்கிறது.

என்ர பிள்ளை காணாமல் போகேக்க  17  வயது.  என்ர பிள்ளை எதுவுமே அறியமுடியாத வயது. இப்ப 30 வயதாகிட்டு. இதுவரை என்ர பிள்ளை எங்க இருக்கிறாள்? என்ன செய்றாள்? எண்டு தெரியல.  பிள்ளைய காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்திலும், யு.என்.எச்.சி.ஆர், முல்லைத்தீவு காணாமல் போன அலுவலகத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனாங்கள் ஆனாலும் அவையள் எந்த பதிலுமே சொல்லேல்ல.

இந்த வயது போன நேரத்தில காணாமல் போன மகளைத் தேடுறதா? இல்லை வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத் தெரியாத நிலையில்தான் நான் இருக்கிறன். என்ர மகள் இருந்திருந்தா இவ்வளவு கஸ்ரப்பட்டிருக்க மாட்டன்.

இப்ப நான் தான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு என்ர மற்ற பிள்ளையின் படிப்புச் செலவையும் பார்த்து வருகின்றேன்.  இந்த நிலையிலேயும் என்ர பிள்ளைய எப்பிடியாவது கண்டுபிடித்து மீட்டுவிட வேண்டும் எண்டு போராடிக் கொண்டிருக்கிறன். ஆனால் என்ர மகள் இருக்கிறாளா இல்லையா எண்டு கூடத் தெரியல.

எங்கட பிள்ளை எங்களுக்கு வேணும்.  ஆசையாக பெற்றெடுத்த மூத்த பிள்ளை. எங்கட கடைசிக் காலத்திலயாவது எங்களோட வந்து இருக்கணும் எண்டு ஆசைப்படுறம். எப்பிடியாவது என்ர பிள்ளைய மீட்டு தாங்கோ?  என்ர பிள்ளை எங்க எப்படி இருக்கிறாள் எண்டு கூட தெரியாது தினமும் ஏக்கத்துடன் தான் வாழ்கிறம். எனக்கு என்ர மகள் வேணும்.” என்று கூறி முடித்தார் அந்தத் தாய்.

இப்படி எத்தனை உறவுகள் தம் காணாமல் போன உறவுகள் திரும்ப வந்திடுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றார்கள். இவர்களின் நம்பிக்கை மெய்யாகுமா?  அல்லது இவர்களின் எதிர்பார்ப்புக்கள் தவிடு பொடியாகுமா?

Exit mobile version