மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: அப்பா வந்திடுவார் என்ற ஆசையுடன் காத்திருக்கும் தாயும் மகனும் – பாலநாதன் சதீஸ்

அப்பா எங்கே என்று தெரியாத நிலை

பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ்

மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர் தொடர்பில் எதுவித முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை. காணாமலாக்கப் பட்டவர்கள் தொடர்பாக  பல்வேறு விசாரணைகள் பல தரப்பினரால் நடத்தப் பட்டிருந்தும், இதுவரை  அதற்கான தீர்வு  கிடைக்கவில்லை.

இப்பிரச்சினையை அரசாங்கம் தீர்த்து வைப்பதாயும் இல்லை.  காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளின் போராட்டமும்  முடியப் போவதாய் தெரியவில்லை.

காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகவும், அவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவும் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது.  ஆனால்  காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையிலும் காணாமல் போன தம் உறவுகள் திரும்ப வந்துவிடுவார்கள்; இந்த  அரசாங்கம் தம் உறவுகளை விடுவித்துவிடும் என்ற நம்பிக்கையில் இன்று எத்தனையோ உறவுகள் போராடி வருகின்றனர்.

அவர்களில் ஒருவராகத் தான் தன் கணவனுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் யோகராசா பிலோமினா என்ற தாய்.

“எனது பெயர் யோகராசா பிலோமினா. நான் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைக் கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஒரு மகன் தான் இருக்கின்றார். எனது கணவர் கிருஷ்ணபிள்ளை யோகராசா இவரைத்தான் இராணுவம் பிடித்துச் சென்றது. அன்று தொடக்கம் இன்றுவரை என்ரை கணவரைத் தேடி வருகிறேன். ஆனால் இதுவரையும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

2009.03.06 ம் திகதி வட்டுவாகல் பனைக்கூடல் பகுதியில்  வைத்து காணாமல் போனவர். அவரை தேடும்போது தான் எங்கட ஊர் மக்கள் சொன்னவை, என் கணவரை இராணுவம் பிடித்துக்கொண்டு போனதைத் தாங்கள் கண்டதாக சொன்னார்கள். என்ரை கணவரை இராணுவம் பிடித்துச் செல்லும் போது அவருக்கு 35 வயது. இப்போ 47 வயது இப்போது எங்கே இருக்கிறார்? எப்பிடி இருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது.

mulli vaikal மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: அப்பா வந்திடுவார் என்ற ஆசையுடன் காத்திருக்கும் தாயும் மகனும் - பாலநாதன் சதீஸ்2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இருந்து கடல் வழியாகச் சென்று திருகோணமலை புடவைக்கட்டுப் பகுதிக்குச் சென்றிருந்தோம். அங்கு கடற்படையினர் ஒருநாள் எங்களை  அங்கு வைத்திருந்து, பின்னர் திருகோணமலை புல்மோட்டையில் சகனகம 1 என்ற முகாமில் வைத்திருந்தார்கள்.

எனக்கு ஒரு ஆண் பிள்ளை தான். அவர் தற்போது 9 ஆம் தரம் படிக்கின்றார். கணவர் காணாமல் போகும் போது பிள்ளைக்கு 1 வயதும் 2 மாதமும். பின்னர் நான் தனியாக பிள்ளையுடன் கஸ்ரப்படுவதனை பார்த்து எனது அக்கா வவுனியாவில் இருந்து வந்து இராணுவத்தினரிடம் கதைத்து எங்களை வெளியே எடுத்திருந்தார்.

பின்னர் 2010 ஆம் ஆண்டு வவுனியா மகாறம்பைக்குளத்திலுள்ள அக்கா வீட்டில் வந்து இருந்தோம். வவுனியாவிற்கு வந்ததும்  வவுனியா ஜோசப் முகாமில் போய், எனது கணவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்தனான்.  பிறகு வவுனியா பொலிஸ் நிலையம், செஞ்சிலுவைச் சங்க நிறுவனம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (omp), ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற இடங்களில் கணவர் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றேன்.  ஆனாலும் இதுவரை என்ரை கணவர் பற்றி எந்தத்  தகவலும் இல்லை.

அதன்பின் 2012.12.25 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்பட்டது.  அதன் போது நாங்கள் எங்களுடைய சொந்த இடத்திற்கு வந்து இருந்தோம். நாங்கள் மீள்குடியேறி வீட்டிற்கு வந்த பின்னர் புதுக்குடியிருப்பில் உள்ள எங்கள் வீட்டிற்கு இரண்டு புலனாய்வுத் துறையினர் வந்து என்னிடம் முழுமையான விபரங்களைக் கேட்டு பதிவு செய்து கொண்டு போனவை. அனால் இதுவரை என்ரை கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதன் பின்னர் யாரென்று தெரியாது இரவு வேளைகளில் கோல் வரும். அதன் பின்னர் புதிதாக வரும் நம்பர்களுக்கு பதில் அளிப்பதில்லை. ஆனால் தற்போதும் அவ்வாறாக புதிய இலக்கங்களில் போன் எடுப்பார்கள். புதிய இலக்கங்களில் வரும் அழைப்புகளுடைய இலக்கங்களை பொலிஸ் நிலையத்தில் கொடுத்து முறைப்பாடும் மேற்கொண்டிருக்கின்றேன். அதற்கும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

காணாமல் போன உறவுகள் தொடர்பாக முல்லைத்தீவில் இடம்பெறும் போராட்டங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே போறனான்.  தற்போது போராட்டத்திற்கு செல்லும்  மனநிலையில் நான் இல்லை. 12 வருடங்கள் கடந்திட்டு அப்படி இருக்கும் போது என்ன வழி இருக்கோ அவ் வழிகளிலே  போராடியும்  என் கணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  அத்தோடு ஒரு மகன் தான் அவருடைய படிப்பினை கவனிக்க வேண்டும்.

தற்போதும் என்னுடைய மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாது?  அப்பாவுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது. ஆனாலும் அப்பா வருவார் என்ற ஆசையோடு தான் இருக்கிறான். இவர் என்னோட இல்லாமல்  மிகவும் கஷ்ரத்தின் மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றேன். ஆனாலும் என்ரை கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் தான் நான் இன்னும் வாழ்ந்து வாறன். எப்பிடியாவது என்ரை கணவனைக் கண்டுபிடித்து தாங்கோ !!” என கண்கள் இரண்டிலும் இருந்து கண்ணீர் வடிய வார்த்தைகள் வெளியே வரமுடியாமல்  தத்தளிக்கத் தடுமாறிய அந்த  நிலையை எப்படிச் சொல்வது?  அவர்கள் தொலைத்த பொக்கிஷத்தையும் அதனால் அவர்கள் அடைந்த  வேதனையும் கூற வரிகளும் இல்லை. வரிகளால் அவர்களின் துயரத்தை வடித்திடவும் முடியாது.

இந்த அம்மாவினைப் போல் வடக்கு கிழக்கில் எத்தனை பேர்  தம் உறவுகளைக்  கடந்த யுத்தத்தின் பின்னர் தொலைத்துவிட்டு,  இன்று வருவர் நாளை வருவார் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றார்கள். இவர்களின் ஏக்கமும், எதிர்பார்ப்பும் அவர்கள் தம் உறவுகளை இழந்து அனுபவிக்கின்ற வலிகளையும் யாருமே புரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுமா? தொலைந்து போன உறவுகள் மீண்டு வருவார்களா? வலி தீருமா?

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: அப்பா வந்திடுவார் என்ற ஆசையுடன் காத்திருக்கும் தாயும் மகனும் - பாலநாதன் சதீஸ்