முல்லைத்தீவில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் படையினரால் நிலங்கள் ஆக்கிரமிப்பு- து.ரவிகரன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களை படையினர் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றார்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நில ஆக்கிரமிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழர் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான படையினர் குவிப்பும், படையினரின் அடக்கு முறைகள், நிலப்பறிப்புக்கள், படையினர் தமக்கேற்ற விதத்தில் புத்தமத திணிப்புக்கள், வியாபார நடவடிக்கைகள் என வட பகுதியில் படையினர் சம்பந்தமான குவிப்புக்களும், படையினரின் ஆதிக்கங்களும் ஏராளம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களை படையினர் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றார்கள். அளம்பிலில் தனியார் காணியை அபகரித்து தோட்டச்செய்கையிலும், கிறீன் ஜெக்கெட் எனும் பெயரில் செம்மலையில் சுற்றுலாவிடுதியும், புதுக்குடியிருப்பில் மரக்கறி செய்கை பண்ணை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரும், கோம்பக சந்தி என்று கூறப்படும் வேம்படி சந்தியில் பல ஏக்கர் காணி அபகரிப்பும் தோட்டச்செய்கையுடன் பொதுவிற்பனை தளம் என பலவாறாக படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைவிட படையினருடைய அச்சுறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. 2021.10.05 அன்று கொவிட் காலத்தில் இராணுவம், தொல்லியல் திணைக்களத்தினர், பௌத்த துறவிகள் ஒன்று கூடி பிரித்தோதலை இராணுவ விழாப்போல் மேற்கொண்டிருந்தார்கள்.

இதனைவிட 2022.03.19 அன்று பிரதமர் யாழ் விஜயத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பிரதமரிடம் சென்று தமது உறவுகளது நிலை பற்றி கேட்க சென்ற போது வாகனத்தினை வழிமறித்தது மட்டுமல்லாமல் பெண்மணிக்கு நடந்த அட்டூழியங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. தமிழ் சகோதரிகள் போராட வெளிக்கிட்டால் இப்படி தான் நடக்கும் என அன்றைய சம்பவத்திலும் படையினர் காட்டி விட்டனர்.

இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக பல்வேறு அடையாள, கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றோம். அச்சுறுத்தும் விதமாக புலனாய்வாளர்களின் நடவடிக்கை , இராணுவம் குவிக்கப்படுதல் , பொலிஸார் வழக்குப்பதிதல் என ஏராளம் என மேலும் தெரிவித்தார்.

Tamil News