இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் 

மியான்மரிலிருந்து இரண்டு படகுகளில் வெளியேறிய 230 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

மியான்மரில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்கள் பல ஆண்டுகளாக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் படகு மூலம் தஞ்சமடைந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்நாடுகளை நோக்கிய கடல் பகுதி அமைதியாக இருக்கக் கூடிய நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் ரோஹிங்கியா அகதிகள் பயணிப்பார்கள். அந்த வகையில், கடந்த நவம்பர் 15ம் திகதி அன்று வந்த முதல் படகில் 27 பெண்கள், 18 குழந்தைகள் உள்பட 111 ரோஹிங்கியாக்கள் வந்தனர் என்றும் இன்று (நவ 16) காலை வந்த இரண்டாவது படகில் 119 ரோஹிங்கியாக்கள் வந்தனர் என்றும் வடக்கு ஏசெஹ் அரசாங்கத்தின் பேச்சாளர் ஹம்தானி தெரிவித்திருக்கிறார்.

இவர்களை எங்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ரோஹிங்கியாக்கள் மியான்மரில் பிறந்த போதிலும் அவர்கள் வங்கதேசத்திலிருந்து வந்த சட்டவிரோத குடியேறிகள் என மியான்மர் அடையாளப்படுத்துகிறது. கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.