இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்கு சென்ற படகு விபத்தில் சிக்கியது: காணாமல் போன புலம்பெயர் தொழிலாளர்கள் 

மலேசியாவுக்கு சென்ற படகு விபத்தில் சிக்கியது

இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவை சென்றடையும் நோக்கத்துடன் 30 இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற படகு இந்தோனேசியாவின் ரியூ தீவுகள் அருகே விபத்தில் சிக்கியுள்ளது. 

இப்படகிலிருந்து 23 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் , 7 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு முகமையின் அதிகாரி Danar Prabawa கூற்றுப்படி, இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மேற்கு Nusa Tenggara மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவுக்கு முறையான ஆவணங்களின்றி இந்தோனேசிய தொழிலாளர்கள் செல்வது தொடர் சிக்கலாக இருந்து வருகிறது. அவ்வாறு செல்பவர்கள் இவ்வாறான படகு விபத்துகளில் காணாமல் போகும் சம்பவங்கள் அல்லது மரணிக்கும் சம்பவங்கள் பல இரண்டு நாட்டின் கடல் பகுதிக்கு இடையே கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன.

Tamil News