ஜெனிவா கூட்ட தொடர்; இணைய வழியில் கலந்துகொண்டு அமைச்சர் பீரிஸ் உரையாற்றுவார்

இணைய வழியில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றுவார்இணைய வழியில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றுவார்: ஜெனிவாவில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இணைய வழியாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

“இதன்போது, கோவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் எமது நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட அபிவிருத்திகள் பற்றிய யதார்த்தமான கருத்தினை நான் குறித்த பேரவையில் சமர்பிக்கவுள்ளேன்” என அமைச்சர் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

கொழும்பு, பத்தரமுல்லையில் பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்தத் தகவல்களை பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நான் பங்கேற்கவுள்ளேன். இணையவழி ஊடாக இதில் கலந்துகொள்வேன்.

கடந்த மார்ச் மாதத்தில் பேரவையின் முன்னைய அமர்வு நடந்தது. அதன்பின்னர் கடந்த ஆறு மாதங்களாக பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. கோவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் எமது நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றிய யதார்த்தமான கருத்தினை நான் குறித்த பேரவையில் சமர்பிக்கவுள்ளேன்.சர்வதேச ரீதியில் தீவிரவாதம் மற்றும் அதன் தாக்கம் என்பது தெளிவான அறிவை அனைத்து நாடுகளும் அறிந்துள்ளன. தீவிரவாத செயற்பாட்டினால் தென்னாசிய நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளையும் அழுத்தத்திற்கு இட்டுச்சென்றுள்ளன.

அண்மையில் நியூஸிலாந்தில் நடந்த கவலைக்குரிய சம்பவம் இதற்கு உதாரணமாகும். இதுபற்றி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய எமது அனைத்து புலனாய்வுப் பிரிவும் நியூசிலாந்தினால் நடத்தப்படுகின்ற விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது பிரித்தானியாவினால் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டமையிட்டு நாங்கள் நன்றி கூறுகின்றோம். தொடர்ச்சியாக அந்த தடையை நீக்கும்படி பல சக்திகள் கோரிக்கை விடுத்துவந்த போதிலும் பிரித்தானிய நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்து வருகின்றது. போர் முடிந்த போதிலும் அரசியல் ரீதியிலான செயற்பாடு காரணமாக நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ள காரணமாகவே பிரித்தானியா இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என நினைக்கின்றோம். இந்த முடிவானது ஏனைய நாடுகளுக்கும் மிகச்சிறந்த உதாரணமாகும்” எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021