‘மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு

‘மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவுக்கான பாதையைத் திறந்துள்ளதுவேல்ஸ் இல் இருந்து அருஸ்

Capture 4 e1625577305552 'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு

ஒரு இனம் உலகில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்றால், அது தனது வரலாற்றைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே அந்த இனத்தின் அடுத்த சந்ததியினரைச் சரியாக வழி நடத்தும். எனவே தான் யூதர்கள் தமது வராற்றைப் பேணிப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

Antisemitism என்ற சொற்பதம் மூலம் தமது இனத்தின் மீது பூசப்படும் கறைகளை அவர்கள் தடுத்து வருகின்றனர். அதாவது அவர்களின் இனத்தின் மீது அல்லது வரலாற்றின் மீது ஆதாரமற்ற அல்லது காரணமற்ற கருத்துருவாக்கங்களை யாரும் முன்வைக்க முடியாது.

21 ஆம் நூற்றாண்டின் மிக உன்னதமான மக்கள் போராட்டமான தமிழீழ விடுதலைப் போரானது, பல பரிணாமங்களைக் கடந்து வந்திருந்தாலும், அது மேலும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதாவது அதனை முன்னகர்த்த வேண்டிய கடமை என்பது, அடுத்து வரும் பல சந்ததியினரில் தான் தங்கியுள்ளது.

kittu director 'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவுஅவ்வாறு கடந்து செல்லும் போது, சரியான வரலாறு அடுத்த தலை முறைக்குக் கடத்தப்பட வேண்டும். எனவே தான் எமது எதிரியும், எதிரிக்கு துணை போவோரும் எமது வரலாற்றை அழிப்பதில் அல்லது திரிப்பதில் முன்னிற்கின்றனர்.

வரலாற்றைத் தவறாகவும், சரியாகவும் மக்களின் மனங்களில் பதிப்பதில் ஊடகங்களும், சினிமாத் துறையுமே அதிக பங்கை வகிப்பவை. சினிமா என்பது வரலாற்றை மக்கள் மனங்களில் உணர்வு பூர்வமாகத் திணிக்க வல்லது. வர்ணம், ஒலி, ஒளி என பல வகைகளில் மக்களின் மனங்களில் வரலாற்றையோ அல்லது தகவல்களையோ உணர்வு பூர்வமாகச் சேர்க்கும் வல்லமை சினிமாவுக்கு உண்டு.

உதாரணமாக ‘Saving Private Ryan’ என்ற படம் போரில் இடம் பெற்ற சம்பவங்களை மிகவும் காத்திரமாக மக்களின் மனங்களில் உணர்வு பூர்வமாக விதைத்துச் சென்றது நமக்கு நினைவிருக்கலாம். 1970 களில் ஒளிபரப்பாகிய ‘Roots’ and ‘Holocaust’ என்ற தொலைக் காட்சிக் குறும் தொடர்கள் அமெரிக்காவிலும், உலக நாடுகளிலும் அடிமைத் தொழில் மற்றும் இனத் துவேசத்திற்கு எதிரான கருத்து ருவாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு வரலாறுகளை மக்களின் மனங்களில் பதித்து, பல மாற்றங்களை ஏற்படுத்திய பல திரைப் படங்கள் வெளி வந்திருக்கின்றன.

எனவே தான் பல இந்திய சினிமாக்கள், குறிப்பாக வேற்று மொழி இந்திய சினிமாக்களும், வேற்று மொழி படைப்பாளிகளும் தமிழ் இனத்தின் வரலாற்றைத் தவறாகச் சித்தரிப்பதில் முன்னணி வகிக்கின்றனர். தமிழ் மக்களின் வரலாற்றைச் சிதைப்பது, அல்லது அவர்களின் போராட்டங்களைக் கொச்சைப் படுத்துவதன் மூலம் அவர்கள் தவறான தகவல்களை உலக மக்கள் மனங்களில் விதைத்து, போராட்டத்திற்கான உலக ஆதரவுகளைக் குறைத்து, அதனை வீரியம் இழக்கச் செய்வதில் முன்னிலை வகிக்கின்றனர்.

உலக வரலாற்றில், மக்கள் விடுதலைப் போராட்டங்களின் வரலாறு குறித்த பதிவுகளும், தகவல்களுமே, அதற்கான உலக ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதில் கணிசமான பங்கை வகிக்கின்றன. எனவே தான் மக்கள் விடுதலைப் போராட்டங்கள் குறித்த உண்மைத் தகவல்களை அந்த விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராகத் தம்மைக் கட்டமைத்துக் கொண்ட நாடுகள் மறைக்கும் அரசியல் அரச தந்திரோபாயத்தைக் கடைப் பிடிக்கின்றன.

இந்த நிலையில் தான் தமிழ் இனத்தின் மிக உன்னதமான விடுதலைப் போரனது எவ்வாறு ஆயுதப் போராக பரிணமித்தது என்பது தொடர்பான சரியான வரலாற்று ஆவணமாக வெளி வந்துள்ளது ‘மேதகு’ திரைப்படம்.

Methagu Movie OTT BS Value 'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு

ஓடிடி(OTT) இணையத்தளத்தின் சுயாதீனத் தன்மை காரணமாக தடைகளைத் தாண்டி, கூற வேண்டிய வரலாற்று உண்மைகளை ஆதாரங்களுடனும், கட்டுப்பாடுகளுடனும் காத்திரமாகக் கூறியுள்ளது. தமிழ் இனத்தின் உண்மையான வரலாற்றை வெளிக் கொண்டு வருவதில் துணிச்சலுடன் பணியாற்றிய BS Value என்ற ஓடிடி தளத்திற்கு தமிழ் மக்கள் தமது ஆதரவுகளை வழங்குவதுடன், பொருளாதார ரீதியாகவும் இந்தத் திரைப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது எமது கடமையாகின்றது.

தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடல் மற்றும் “ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரிலும் மேலானது எமது உரிமை” என்ற எம் தலைவரின் வரிகள் என்பன உட்பட படத்தின் சிறப்பம்சங்கள் ஏராளம்.

இந்தத் திரைப் படம் உலகத்தமிழ் மக்களால் போற்றப்படும் தேசியத் தலைவர் ஏன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான வரலாற்று உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளதுடன், அகிம்சையின் வடிவமாகக் கருதப்படும் புத்தரை ஆராதிக்கும் பௌத்த துறவிகள் ஒரு இனத்தை அழிப்பதிலும், அரசியலில் அதிகாரம் செலுத்துவதிலும் எவ்வளவு தூரம் வன்முறையானவர்களாக நடந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் தெளிவாக உலக மக்களுக்கு கூறியுள்ளது.

kuttimani 'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு

பிரித்தானியாவில் உள்ள கென்ற் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதான எனது மகள், இந்தப் படத்தை பார்த்த போது, “அப்பா எங்கள் பாடசாலையில் பௌத்த மதம் மிகவும் மென்மையான மற்றும் அமைதியான மதம் என்று தான் சொல்லித் தந்தார்கள்” என்று என்னிடம் கூறினார். ஆனால் இலங்கையில் உள்ள பௌத்த மதம் நேர் எதிராக உள்ளதானது தனக்கு அதிர்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்தார்.

அதாவது வரலாற்று உண்மைகள் தெளிவாகும் போது, நாம் தேர்ந்தெடுக்கும் போராட்ட வழிமுறைகளும் இளம் தலைமுறையினரிடம் தவறாகத் தெரியப் போவதில்லை. எனவே ஈழத்தின் மீதான உலக மக்களின் நல்ல அபிப்பிராயம் ஏற்பட இந்தப் படம், பொருளாதார ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் மகத்தான வெற்றியைப் பெற வேண்டும்.

‘உச்சிதனை முகர்ந்தால்’ போன்ற சில படங்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போரின் வரலாற்றுத் தகவல்களைச் சுமந்து வெளிவந்த போதும், வர்த்தக ரீதியாக அவை வெற்றி பெறாததே படைப்பாளிகளின் மற்றும் கலைஞர்களின் கவனம் எம்மை நோக்கி திரும்பாததற்கான காரணம்.

இன்றைய உலக ஒழுங்கு என்பது ஒரு வர்த்தக நலன்சார் கட்டமைப்பு. அங்கு பொருளாதார நலன்சார் நடவடிக்கைகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. சினிமாவில் கூட வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் கதைகள் மற்றும் வரலாறுகளை நோக்கியே படைப்பாளிகளின் கவனம் திரும்புவதுண்டு.

இந்தச் சூழ்நிலை மாற்றத்தை நாம் சரியாக உள்வாங்குவோமாக இருந்தால், எமது  உண்மையான வரலாற்றைப் பதிவு செய்வதற்காகத் தற்போது திறக்கப்பட்டுள்ள வெளியை நாம் வலுவாக பயன்படுத்துவதுடன், பொய்யான தகவல்களைக் கொண்ட படைப்புக்களையும் புறம்தள்ள முடியும்.

எனவே தமிழ் இனத்தின் விடுதலைப் போரின் தேவையையும், அதன் வடிவத்திற்கான வலுவான காரணத்தையும் முன்வைப்பதுடன், தமிழ் மக்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற விம்பத்தை ஏற்படுத்த முயன்று வரும் ஏனைய படைப்புக்களை எல்லாம் புறம் தள்ள நமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நாம் வலுவாக பற்றிப் பிடிப்பதுடன், இந்த திரைப் படக் குழுவினரும் போற்றப்பட வேண்டியவர்கள்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு