சீனா மற்றும் இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீனா மற்றும் இலங்கைக்கிடையில் உலக அபிவிருத்தியின் முன்முயற்சி திட்டத்தை நடைமுறைப்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உப தலைவர் டெங் போகிங் கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போதே இவ் ஒப்பந்தம் உட்பட இரு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவசர மனிதாபிமான உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவுள்ளது. குறித்த ஒப்பந்தத்திற்கமைய 62 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் சீனாவிடமிருந்து கிடைக்கப் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்த டெங் போகிங் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் , மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருடன் முக்கிய சந்திப்புக்களிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்த சந்திப்புக்களின் போது , சீன – இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், இரு நாடுகளின் நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியை கூட்டாக அமுல்படுத்துதல் தொடர்பாக ஆழமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்பட்டதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு உட்கட்டமைப்பு நிர்மாணம், கலாசாரம், கல்வி மற்றும் அவசர மனிதாபிமான உதவி ஆகியவற்றில் இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான உதவிகள் குறித்தும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

திறன் மேம்பாடு , மீனவர்களுக்கான ஒத்துழைப்பு வேலைத்திட்டங்கள் , புகையிரத சேவைகளை மேம்படுத்தல் போன்றவற்றில் இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான உதவிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளது.

சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உப தலைவரின் இவ்விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இலங்கையின் பொருளாதார மீட்சி , சமூக மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவும் முக்கிய காரணிகளாக அமையும் என்று சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இவை தவிர இலங்கையின் கோரிக்கைக்கு அமைய இலத்திரனியல் தடயவியல் ஆய்வகத்தை நிறுவுவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.