முழுமையான அதிகார பரவலாக்கத்துடன் மாகாண சபைகள் இயங்குவதை வலியுறுத்தும் கூட்டம் நாளை சென்னையில்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளினூடாக முழுமையான அதிகார பரவலாக்கம் இடம்பெறுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒப்பந்தத்தின் முழுமையான நிர்வாக நடைமுறைகளைப் பொறுத்தவரை பல்வேறு தடைகளும் பின்னைடைவுகளும் காணப்படுகின்றன.

இருநாடுகளின் அரசத் தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பரஸ்பரமுடன் இரு தரப்பினரும் செயற்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் முகமாக தமிழக அரசியல் வட்டாரங்களில் கலந்துரையாடல்கள், கருத்து பரிமாறங்களை ஏற்படுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

அந்தவகையில் முதற்கட்டமாக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகங்களை ஒன்றிணைத்து கருத்தரங்குகள், சர்வ கட்சிகளின் மாநாடுகள், செய்தியாளர் சந்திப்பு போன்ற செயற்பாடுகளை சென்னையிலும், புது டெல்லியிலும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன் முதலாவது கட்டமாக அரசியல் கலந்துரையாடல் மற்றும் செய்தியாளர் சந்திப்பு என்பன நாளை (ஜன 06) வெள்ளிக்கிழமை முற்பகல் சென்னை பிரஸ் கிளப்பில் இடம்பெறவுள்ளது.

மனித உரிமை அடிப்படையிலான சமாதானம் மற்றும் அபிவிருத்திகான அமைப்பின் அழைப்பின் பேரில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, பாராளுமன்ற உறுப்பினர்களான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான சி.நல்லகண்ணு, சி மகேந்திரன், பழ.நெடுமாறன் பேராசிரியர் டேவிட் ஸ்டான்லி, மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர் சதீஷ்குமார் சிவலிங்கம், விசிக பேச்சாளர் வன்னி அரசு, தினகரன் தலைமை ஆசிரியர் தே. செந்தில்வேலவர், முனைவர் ரங்கராஜன், பாமக, மதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளால், உருவான வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களுக்கு தீர்வுகாணும் முகமாகவே சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஜேஆர் ஜயவர்த்தன மற்றும் பிரதமர் ராஜீவ் ஆகியோருக்கிடையி ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கையின் அரசியலமைப்பு சாசனத்தில் 13ஆவது திருத்தம் வாயிலாக தோற்றுவிக்கப்பட்ட மாகாண நிர்வாக செயல்முறைகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக சட்டப்பூர்வமாக தடையின்றி மக்களின் ஜனநாயக தெரிவுகள் அடிப்படையில் இயங்க வேண்டுமென்பதே பிரதான நோக்கமாகும்.

இருப்பினும் கடந்த சில வருடங்களாக இலங்கையில் நிலவிவரும் பல்வேறு அரசியல், சமூக பொருளாதார சூழ்நிலைகள், அரசின் உதாசீனங்கள் காரணமாக வடக்கு கிழக்கு மலைநாடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

எனவே துரிதமாக தேர்தல்களை நடாத்தி மக்களின் ஜனநாயக கடமைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனவே இந்த விடயத்தில் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளினதும் வலியுறுத்தலும் உரிய தீர்வுக்கு உறுதுணையாக அமையுமெனவும் எதிர்பாக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் உள்ளூராட்சி, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியை தெரிவு செய்வது தேர்தல்கள் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகின்ற சூழ்நிலையில், வருடக்கணக்கில் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் முழுமையான அதிகார பரவலாக்கம் தொடர்பாக தமிழகத்திலிருந்து ஏற்படக்கூடிய அழுத்தங்கள் காரணமாக மத்திய அரசின வெளியுறவு கொள்கைகளில் 13 திருத்தம் தொடர்பாக சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது வடகிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் முகமாக சர்வகட்சிகளின பங்கேற்புடன் கூட்டங்களை நடாத்தி வருகிறார்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழகத்திலிருந்தும் ஏற்படக்கூடிய கருத்தாக்கங்கள் தமிழ் மக்களுக்கு சாதகமாகவே அமையும்.

நன்றி-தினகரன்