ஊடகவியலாளர்களை வேட்டையாடி ஊழல்வாதிகளை பாதுகாப்பதா? ஊடக அமைப்புக்கள் சீற்றம்

ஊடக அமைப்புக்கள் சீற்றம்ஊடகவியலாளர்களை வேட்டையாடி ஊழல்வாதிகளை பாதுகாப்பதா? ஊடக அமைப்புக்கள் சீற்றம்: ஊடகவியலாளர்களை வேட்டையாடி ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசின் வெட்கம் கெட்ட முயற்சியைக் கடுமையாகக் கண்டிப்பதாக இலங்கை ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து இது தொடர்பில வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிலிருந்து பதவி விலகிய முன்னால் பணிப்பாளர் நாயகம் துசான் குணவர்த்தனவால் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைப்பூடு மோசடி மற்றும் வேறு மோசடிகளை அறிக்கையிட்ட லங்காதீப, திவயின மற்றும் த ஐலன்ட் செய்திப் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை விசாரணை என்ற போர்வையில் குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வரவழைத்த சம்பவம் தொடர்பில் ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு தமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் இந்தச் செயற்பாடு ஊழல்வாதிகளை பாதுகாப்பதுடன், ஊழல் தொடர்பான தகவல் வெளிப்படுத்துவதை தடுக்கும் மோசமான முயற்சியாகவும் காணப்படுகின்றது.

வெளிப்படுத்தப்பட்ட ஊழலை விசாரிப்பதற்கு பதிலாக, அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான பொலிஸார் அவரை அவமதித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு ஊடகவியலாளர்களைக் குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு அழைப்பதானது 2002 ஆம் ஆண்டில் குற்றவியல் அவதூறு சட்டத்தை ரத்து செய்துள்ள பிண்ணனியிலேயே ஆகும். சட்ட அடிப்படைகள் ஏதும் இல்லாத நிலையில் கூட, அரசியல் நலன்களை நிறைவேற்றக் பொலிஸாரை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பத்திரிகையாளர்களைக் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்க வேண்டாம் என்ற பிரதமரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழு லங்காதீப அலுவலகத்துக்கு சமூகமளித்துள்ளது. அந்தச் சம்பவம் இடம்பெற்றது செப்ரெம்பர் 28 ஆம் திகதி, அதாவது சர்வதேச தகவல் தினம் அன்றே ஆகும். மேலும் குறித்த அதிகாரிகளுக்கு லங்காதீப் ஆசிரியர் தகவல் கொடுக்க மறுத்தமை குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் மோசடி மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் வெளிவரும்போது அரசியல் காரணங்களுக்காக ஊடகவியலாளர்களை வேட்டையாட பொலிஸாரை வழிநடத்துவது கடுமையான குற்றம் ஆகும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெகுசன ஊடக அமைச்சர் மன்னிப்பு கேட்டாலும் கூட இது போன்ற அறிக்கையில் மாத்திரம் திருப்தி கொள்ள முடியாது என்று ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது.

ஆகவே, இத்தகைய வெட்கமில்லாத அரசியல் இலாபம் கொண்ட செயல்களை வன்மையாகக் கண்டிக்கும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காகவும், மோசடி மற்றும் ஊழல் பற்றிய உண்மையை அறியும் பொதுமக்களின் உரிமையைப் பாதுகாக்கவும் ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு உறுதிபூண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021