பொருளாதார சிக்கல்களுக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும் தீர்வு கோரும் மே தினம்

தொழிலாளர்களின் உரிமைகளையும் ஐக்கியத்தையும் மே தினம் வலியுறுத்துகின்றது. தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தமது உரிமைகளுக்காக சாத்வீக முறையில் நடத்திய போராட்டத்தின் விளைவே சர்வதேச மே தினமாகப் பரிணமித்திருக்கின்றது.

அமெரிக்காவில் தொழிலாளர்கள் தமது உரிமைக்காக ஒன்றிணைந்து இறுக்கமான ஒரு போராட்டத்தை முன்னெடுத்ததன் காரணமாகவே அவர்கள் வெற்றி கொள்ள முடிந்தது. கம்பனி முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டி, கொள்ளை இலாபம் அடைந்தார்கள். காலை முதல் மாலை வரையில் உழைத்த தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்பட்டார்கள்.

தம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளையும் சித்திரவதைகளையும் அவர்கள் எதிர்த்துப் போராடினர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டு உயிர்ப்பலி கொள்ளப்பட்டபோதிலும் அவர்கள் தமது போராட்டத்தைக் கைவிடவில்லை. தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து எழுப்பிய குரலுக்குக் கிடைத்த வெற்றியின் அடையாளமே மே தினமாகும்.

இந்த மே தினம் இலங்கையில் தொழிலாளர்கள் தினம் என்பதிலும் பார்க்க, அரசியல்வாதிகளின் கொண்டாட்ட நிகழ்வாகவும், அரசியல் கட்சிகளின், கட்சி நலன்களுக்கான பிரசார மேடையாகவுமே பயன்படுத்தப்பட்டது. அத்துடன் தமது அரசியல் எதிரிகள் மீது தாராளமாக வசைபாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த மே தினம் அவர்களால் பயன்படுத்தப்பட்டது.

இதற்கு மத்தியில், இலங்கையில் உண்மையாகவே மறுக்கப்பட்டுள்ள உரிமைகளுக்காகவும் புறந்தள்ளப்பட்டுள்ள அவர்களது நலன்கள் சார்ந்த நிலைமைகளுக்காகவும் தொழிலாளர்கள் மே தினத்தன்று குரல் எழுப்பி பேரணிகளை நடத்தினார்கள். கூட்டங்களில் குரல் எழுப்பினார்கள்.

ஆனால் அந்த மே தினத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளும் அரச தரப்பினரும் தங்களுடைய அரசியல் கட்டமைப்புக்களின் ஊடாக தொழிலாளர்களைத் திசை திருப்பிச் செயற்பட்டார்கள். அரச விழாக்களாக நடத்தப்பட்ட அரச தரப்பினருடைய மே தின நிகழ்வுகளில் சினிமா நட்சத்திரங்களின் பங்கேற்புடன் களியாட்ட முறையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

அரசியல் வேடதாரிகளின் கபடத்தனத்தை அறியாத அப்பாவிகளான அல்லது விழிப்புணர்வற்ற தொழிலாளர்கள் பலர் இத்தகைய நிகழ்வுகளில் அந்த அரசியல்வாதிகளின் பின்னால் அணிதிரண்டிருந்தார்கள். இத்தகைய பின்னணியைக் கொண்ட மே தினம் இந்த வருடம் வழமையான நிகழ்வுகளில் இருந்து மாறுபட்டிருக்கின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியும், அதனையொட்டி கிளர்ந்துள்ள வீதிப் போராட்டங்களும் அரச சார்பு அரசியல்வாதிகள் மே தினப் பேரணிகள், கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாதவாறு தடுத்து நிறுத்தி இருக்கின்றன. பொருளாதார நெருக்கடிகளினால் எழுந்துள்ள வாழ்வியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றத்தைக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களே இந்த மே தினத்தில் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன.

எதிரணி அரசியல் கட்சிகளின் அரசுக்கு எதிரான போராட்டங்களும் பேரணிகளும் மே தின நிகழ்வுகளாக மாறி இருக்கின்றன. நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் கோத்தாபாயாக்கள் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துச் செயற்படத் தவறியதன் விளைவாகவே இந்த நிலைமை நேரிட்டிருக்கின்றது.

பெருந்தோட்ட முதலாளிமார்களும் பெருந்தேசியக் கம்பனிகளும் தொழிலாளர்களைச் சுரண்டியது போலவே, ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் வளங்களையும் மக்களின் நலன்களையும் தமது வெளிப்படையற்ற கொள்கைச் செயற்பாடுகளின் மூலம் சுரண்டினார்கள். இதனால் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய ஒரு நிலையில் சீற்றம் கொண்டு எழுந்துள்ள மக்கள் அரசாங்கம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள் அந்தப் போராட்டத்தின் ஒட்டுமொத்த போராட்ட களமாகவே இம்முறை மே தினம் அமைந்திருக்கின்றது.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ராஜபக்சக்களினால் தீர்வு காண முடியவில்லை. அரசாங்கத்தின் தவறான கொள்கைகள், தவறான செயற்பாடுகள் என்பவற்றினால் அதிருப்தி அடைந்துள்ள அரச பங்காளிக் கட்சிகள் அரச கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியும், பொருளாதார நெருக்கடி காரணமாக பொங்கி எழுந்துள்ள மக்களின் போராட்டங்களும் ஆட்சியாளர்கள் அனைவரையும் – குறிப்பாக ராஜபக்சக்களை மிகுந்த சிக்கலுக்குள் ஆழ்த்தி இருக்கின்றன.

மொத்தத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கோரிக்கைகள், வாக்குறுதிகளுடன் கழிந்து போகின்ற வழமையான மே தினமாக அல்லாமல் நெருக்கடிகள், சிக்கல்கள் மிகுந்த சூழலிலான ஒரு மே தினமாகவே இந்த மே தினம் அமைந்துள்ளது.

Tamil News