Home செய்திகள் யாழ்ப்பாணம்,வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி மே-18 நினைவு வாரம் ஆரம்பம்

யாழ்ப்பாணம்,வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி மே-18 நினைவு வாரம் ஆரம்பம்

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பித்துள்ளதை அடுத்து யாழ்ப்பாணம் நல்லூரில் முள்ளாவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழினப் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அருகில் இன்று (12) இடம்பெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ் மாவட்ட உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு படுத்தும் முகமாக அரிசி மற்றும் உப்பு போடப்பட்ட முள்ளி வாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும்  காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வாளர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ் மாவட்ட உறவுகளால் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம்  வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

வவுனியா இலுப்பையடியில் இடம்பெற்ற நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை வீதியால் சென்ற பொது மக்களுக்கும் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version