மே18 நினைவேந்தல் : சிங்கள மக்களை நினைவேந்தல் அனுஸ்டிக்க அழைப்பு- செல்வம் எம்பி

அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதுடன் மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஸ்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய நாளிதழான தி இந்து வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து முழு எச்சரிக்கையுடன் இருப்பதாகக் கூறியிருக்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்.

ஆங்கில தி இந்து நாளிதழ் செய்தியில் ,

நாடு ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இலங்கையில் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன என்று தி இந்து நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதில், தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தீவு நாடு இரண்டு முறை அவசரநிலையை அறிவித்த நிலையில், பன்னாட்டுத் தொடர்புகளைக் கொண்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரில் சில பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை “உணர்த்த” முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் தேதி, சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்க தாக்குதல்களை திட்டமிடுவது மட்டுமின்றி, தங்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா மற்றும் பலர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும் முன்னாள் புலிகள் சதித்திட்டம் தீட்டியதாக தி இந்து நாளிதழ் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

உளவுத்துறை உள்ளீடுகளை மேற்கோள்காட்டும் வட்டாரங்கள், இலங்கையில் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்காக முன்னாள் எல்டிடிஈ உறுப்பினர் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் இதை கருத்தில் கொண்டு கடலோர மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மாநில உளவுத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையின் சிறப்புப் படையினர் மாநிலத்தில் சுமார் 1,000 கி.மீ தூரத்துக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுமமும் கடல் எல்லையில் ரோந்துப் பணியை அதிகப்படுத்தியுள்ளது என்றும் அந்த ஆங்கில நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடலுக்குச் செல்லும் இந்திய மீனவர்களுக்கு தற்போதைய சூழலின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், ஆழ்கடலிலும், சர்வதேச கடல் எல்லை பகுதியிலும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் தெரிந்தால் அது குறித்து உளவுத்துறையினர், கடலோர காவல் படையினர் அல்லது மாநில காவல்துறையிடம் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள், தங்களுடைய எல்லை வரம்புக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் கடலுக்குச் செல்லும் அனைத்து வீதிகளிலும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்துவதற்காக அனைத்து கடலோர மாவட்டங்களின் பொலிஸ் அத்தியட்சகர்களும் சோதனைச் சாவடிகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் அல்லது அதன் முன்னாள் செயல்பாட்டாளர்களின் நடமாட்டங்களை சமீப வருடங்களாக தமிழ்நாடு கவனித்து வருகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக அமைப்பான என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, சர்வதேச தொடர்புகளுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் புலிகளின் முன்னாள் உளவுப்பிரிவின் செயல்பாட்டாளரான சபேசன் என்ற சத்குணம் என்பவரை கைது செய்தது. அவர் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.

மற்றொரு வழக்கில், செயலற்ற வங்கிக் கணக்கில் கிடக்கும் பெரும் தொகையை மோசடியான முறையில் எடுக்க மும்பை சென்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இலங்கையில் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக நிதி திரட்டும் பணிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன,” என்று தி இந்து நாளிதழ் செய்தி குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன், புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தினை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் துக்கத்தினை அனுபவித்து வரும் இந்த சூழலில் இப்படியான செய்திகள் வருவதை ஏற்கமுடியாது. இது எமதுமக்களின் அஞ்சலியை தடைசெய்வதற்கான உக்தியாகவே பார்க்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “வவுனியாவில் சிங்களதேசத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்திய மகானை இன்றையதினம் நாம் நினைவு கூருகின்றோம்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல் பட்டனர். மகிந்த கோட்டா அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்து காட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.

இதே காலப்பகுதியில் சிங்களமக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலை கோட்டா அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளது.இந்த நாட்டை கொண்டு நடாத்தும் திறமை அவர்களிடம் இருக்கவில்லை என்பது இன்று

புலனாகின்றது. சிங்கள மக்களின் அந்த செயற்பாட்டில் நாங்களும் இணைந்து கொள்கின்றோம். அத்துடன் இழந்துபோன தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்யும் வாய்ப்பினை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் புதிய பிரதமர் ஏற்படுத்தி தரவேண்டும். இந்த நிகழ்வில் சிங்கள மக்களும் கலந்து கொள்ள வேண்டும். போராட்ட காரர்கள் கலந்து கொள்ள வேண்டும். உயிரிழந்த எமது மக்களுக்கு அவர்களும் அஞ்சலியை செலுத்தவேண்டும்.

அத்துடன் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் நிதானமாக தனது கருத்தை சொல்லியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. முதலமைச்சராக இருந்தவர் மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர் உடனடியாக அப்படியான கருத்தை ஏன் சொன்னார். என்று தெரியவில்லை அவர் நிதானமாக கருத்தை சொல்லியிருக்கலாம்.

இந்த சூழலில் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து முடிவினை எடுக்கும் சந்தர்ப்பம் தொடர்பாக நாம் பரிசீலிக்க வேண்டும்”என்றார்.

Tamil News