பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனர்கள் பலர் படுகாயம்

இஸ்ரேலுடனான காசா பகுதியின் கிழக்கு எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தில் பலஸ்தீனர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தின் பழைய நகரில் தீவிர வலதுசாரி இஸ்ரேலியர் நடத்திய பேரணிக்கு பதில் நடவடிக்கையாகவே நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெரூசலம் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்த காசா ஆர்ப்பாட்டக்காரர்கள் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தின் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும்படியும் அழைப்பு விடுத்தனர்.

எனினும் பலஸ்தீனர்கள் இஸ்ரேல் மற்றும் காசா தடுப்பு வேலி மீது வெடிபொருட்களை வீசியதை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் ஜெரூசலத்தின் முஸ்லிம் பகுதிகள் ஊடாகச் சென்ற ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய தேசியவாதிகள் பலஸ்தீனத்திற்கு எதிரான கோசங்கள் மற்றும் “அரபிகள் ஒழிக” என்ற பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.

1967 போரில் இஸ்ரேல் ஜெரூசலத்தை கைப்பற்றியதைக் கொண்டாடும் ஜெரூசலம் தினத்தை ஒட்டியே இந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது. இதனால் அச்சம் காரணமாக பலஸ்தீனர்கள் தமது வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை மூடினர்.

ஜெரூசலத்தின் ஆத்திரத்தை தூண்டும் பேரணிக்கு எதிராகவே தான் இங்குவந்ததாக காசா ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50 வயது ஒசாமா அபூ கமர் தெரிவித்தார்.