கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் – மட்டு.நகரான்

கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநில

மட்டு.நகரான்

கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது!

அண்மைக் காலமாக வடகிழக்கில் காலநிலை மாற்றங்கள் காரணமாக பாரிய அழிவுகளை, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் கொள்ளப்படுவதை காணமுடிகின்றது. குறிப்பாக இந்த அழிவுகள் பெருமளவில் இயற்கையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் காரணமாகவே இடம்பெறுகின்றது என்பது அனைவராலும் உணரப்படுகின்ற போதிலும், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

images 1 3 கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் - மட்டு.நகரான்குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் 25வீதமான பகுதி நீர்நிலைகளினால் சூழப்பட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றங்கள் காரணமாக பாரியளவிலான அழிவுகளை மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொண்டு வருகின்றது.

இந்த அழிவுகளுக்கான காரணங்களாகக் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால், இயற்கை வளங்கள் பாரியளவில் படையினரால் அழிக்கப்பட்டமை கொள்ளப்படுவதுடன், யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத அபிவிருத்திகளும் காரணமாக அமைகின்றன.

கண்டல் தாவரங்கள்

குறிப்பாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், கண்டல் தாவரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நிலப்பரப்பின் பாதுகாப்பு அரண்களாக இந்த சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் இருப்பதுடன், கிராமியப் பொருளாதாரத்தின் ஆணி வேராகவும் இந்தக் கண்டல் தாவரங்கள் இருந்தன.

இது சதுப்புநிலத் தாவரங்களாக உள்ளதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இவ்வகைத் தாவரங்களானது, வளியிலுள்ள கரியமில வாயுவை உறுஞ்சுதல் மற்றும் பிரித்தெடுத்தல், வடிகட்டுதல் ஊடாக கரையோர வளிமண்டலத்தைப் பாதுகாத்து, அபாயகரமான காலநிலை மாற்ற அனர்த்தங்களின் தாக்கங்களைக் குறைக்கின்றதுடன், கரையோர மண்ணரிப்பினையும் தடுக்கின்றது. இச் சுற்றுச்சூழல் தொகுதி, கடல்நீர் மற்றும் அலை நடவடிக்கைகளின் செல்வாக்கிற்கு அடிக்கடி உட்படுத்தப்படுகின்றமையால், உயிரினங்கள், தாவர இனங்கள் போன்ற பல்வகை உயிரினங்கள் தங்கி வாழ்வதற்கு ஏற்ற இடமாக உருவாகின்றது. மேலும் சுற்றுலாத்துறைக்கு அதிகளவிலான  பங்களிப்பை வழங்கி, கரையோர மக்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களையும் இவை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள்அதிகளவிலான கழிவுகளைக் கொட்டுவதன் மூலம் இவ்வகை நிலங்கள் மாசடைவதுடன், விறகுத் தேவைக்காகவும் இவை அழிக்கப்பட்டு வருகின்றன. திட்டமிடப்படாத நகரமயமாக்கல், சட்டவிரோத நில அத்துமீறல்கள், கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், குடியேற்றங்களுக்கான ஆக்கிரமிப்புக்கள், கழிவுநீர் கலப்பு, அந்நிய நுண்ணுயிர்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் இக் கண்டல் சதுப்பு நிலங்கள் தமது சிறப்புத் தன்மையை இழந்து, அழிவை எதிர்நோக்கி வருகின்றன. இந்த நிலைமையானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவாகக் காணப் படுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சதுப்புநிலப் பகுதியிலேயே அதிகளவான மீன் இனங்களும், நண்டு, இறால் போன்றவைகளும் பெருக்கமடைந்து, ஆறுகளில் சேர்கின்றன. இப்பகுதியில் உருவாகும் நண்டு, இறால் என்பது முன்னைய காலங்களில் இலங்கையில் சிறப்பு மிக்கதாகக் காணப்பட்டதாக நீண்டகாலமாக மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு முன்னர் மட்டக்களப்பு வாவி முழுவதும் சதுப்பு நிலங்களும், கண்டல் தாவரங்களும் காணப்பட்ட நிலையில், யுத்த காலத்தில் கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டதாகவும், சதுப்பு நிலங்கள் மூடப்பட்டு, காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவிலான சதுப்பு நிலங்கள் இல்லாமல் செய்யப்பட்டதாகவும் மீன்பிடித் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அலையாத்தித் தாவரங்கள்

சதுப்பு நிலங்கள், உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் என்றும், நன்னீர் சதுப்பு நிலங்கள் என்றும் இரண்டு வகையாக உள்ளன. சதுப்பு நிலங்களில் கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை அலையாத்தித் தாவரங்கள் என்பர். அலையாத்தித் தாவரங்கள் சுனாமி போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான பெரும்பாலான பகுதிகள் இல்லாமல்போயுள்ள நிலையில், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் இவ்வாறான இடங்கள் உள்ளன.

இலங்கையின் காலநிலை மாற்றத் தாக்கங்களைக் குறைவடையச் செய்யவும், கடலோர சமூகங்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கு உதவவும் கண்டல் தாவர பரம்பலைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் ஆகின்றது. சதுப்பு நிலக் கண்டல் தாவர மீள் நடுகைகளை ஊக்குவித்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம் என்பவை புதிய தாவரப் பரம்பலை அதிகரிக்க உறுதி செய்கின்றது. சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் தொடர்பான முக்கியத்துவம் தொடர்பாக கல்வியறிவூட்டல், விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் செயல்திறன் மிக்க திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான, பெண்கள், இளைஞர்கள் சமூகங்களை மையமாகக் கொண்ட, காலநிலை நடவடிக்கைகளின் திறனை உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஊக்குவித்தல் போன்றவை இலக்கினை அடைவதற்கு வழிகோலும்.

எதிர்காலத்தில் வடகிழக்கில் வலுவான காலநிலை கட்டமைப்புகளுடன் சமூகங்களை உருவாக்குவதற்கும், இயற்கை சமநிலைகளைப் பேணுவதற்கும் இவ்வாறான செயற்பாடுகள் மிக முக்கியமாகின்றது.

கண்டல் தாவர சதுப்பு நிலங்களானது, அதிகளவிலான வெளிநாட்டவர்களைக் கவர்கின்றமையினால், சிறப்பானதொரு சுற்றுலாத்துறை சார் கொள்கைத் திட்டமிடலுக்கு வழிகோலுகின்றது. பல்வேறு சட்ட திட்டங்கள், அரச நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றால் கண்டல் தாவர நிலம் சார் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு நியாயமான, சமமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான ஓர் அணுகுமுறையை மேற்கொள்வதை உறுதி செய்வதன் மூலம், எமது மக்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காக வாழ்வாதார அபிவிருத்தியை நோக்கிய அதிக நன்மைகளைப் பெற முடியும்.

கிழக்கு மாகாணத்தில் நீர்நிலைகளைக் கொண்டுள்ள பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் இவ்வாறான சதுப்பு நிலங்களையும் கண்டல் தாவரங்களையும் பாதுகாப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதுடன், அவற்றின் மூலம் வினைத்திறன் மிக்க பொருளாதார மேம்பாட்டினைப் பெறுவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வெறுமனே நிலம் பறிபோகின்றது, அத்துமீறிக் காணிகள் பிடிக்கப்படுகின்றது, வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து வளங்களை அபகரிக்கின்றார்கள் என்று தொடர்ச்சியாக நாங்கள் பேசிக்கொண்டிருக்காமல், இருக்கின்ற வளங்களைப் பாதுகாத்து முன்னேறுவதற்கான வழிவகைகளை தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். நாங்கள் இதனை செய்யாது போனால், இயற்கைச் சீற்றம் உட்பட பல்வேறு அழிவுகளுக்கு எமது சமூகம் உள்ளாவதுடன், தொழில்துறைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் போய்விடும்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் - மட்டு.நகரான்