மாமனிதர் சிவராமின் எழுத்துக்கள் துரோகிகளின் முகத்திரையை கிழித்தது- -பா.அரியநேத்திரன்-

மாமனிதர் சிவராம் – ஈழப்பறவைகள்மாமனிதர் சிவராம் கொலை செய்யப்பட்டு இன்று 2023,ஏப்ரல்,28,ல் 18, ஆண்டுகள் கடந்தும் அவரின் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்காமலேயே அவரின் நினைவுகள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

அவர் மட்டுமல்ல படுகொலை செய்யப்பட்ட 46, ஊடகவியலாளர்ளின் படுகொலை சூத்திரகாரிகளுக்கு இதுவரை தண்டனை இல்லாத நிலையே தொடர்கிறது.

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி கடத்தி செல்லப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29 ம் திகதி சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொலை செய்யப்பட்டர்.

சிவராம் அவர்கள் தராகி என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன.

<

p style=”text-align: justify;”>சிவராம் இனப்பற்றும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த ஊடகப்போராளியும் இராணுவ ஆய்வாளரும் ஆவார்.
சிங்கள பேரினவாதத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறினார்.

இவர் 28.04.2005 அன்று கடத்தப்பட்டு கொடுரமான முறையில் கொல்லப்பட்டார். அவரின் உடலம் மறுநாள் 29.04.2005 இலங்கைப்பாராளு மன்றத்திற்கு சமீபமாக இருந்த ஜப்பான் நல்லுறவு வீதியோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. சிவராம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணிகளைக் கௌரவிக்கும் முகமாக விடுதலைப்புலிகளின்  தலைவர் மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருதை வழங்கி கௌரவித்தார் .

சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய தமிழ்த்தேசிய குரலை அடக்கவே அவர் கொலை செய்யப்ட்டதாக பலராலும் கூறப்பட்டன.
தமிழ்த் தேசியத் தளத்தில் இதுவரை அவரைப்போன்ற தீர்க்க தரிசனம் மிகுந்த கருத்துக்களை யாரும் முன்வைத்ததில்லை.

அவர் படுகொலை செய்யப்பட்ட காலத்திற்கும் தற்போது இருக்கும் 18, வருட காலத்திற்கும் இடையில் வரலாறே தலைகீழாக மாறி நிற்கிறது. ஆனால் இப்போதும் அவரது ஆய்வுகள் சமகால வரலாற்றுக்கு அமைவாக எழுதப்பட்டிருப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது.

எத்தனை ஆய்வாளர்களின், அறிஞர்களின், புலமையாளர்களின் ஆய்வுகள் பொய்த்துப்போனதும் நேரத்திற்கு ஏற்றமாதிரி தமது தாளலயங்களை மாற்றிக்கொள்ளும் கபடத்தனத்தையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்கிறோம். சிவராமிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாக அவரின் ஆய்வுக்கட்டுரைகள் அமைந்திருந்தன.

தமிழ்த்தேசியத்தின் ஒரு குரலாக சிவராமின் ஆய்வுகளை பார்க்முடிந்தது.
இனஅழிப்பு நோக்கங்கங்களுடன் சிங்கள அரசு மட்டுமல்ல எமக்குள்ளிருந்துகூட வரலாற்றை மறைக்கவும் திரிக்கவும் பலர் களமிறங்கியிருக்கிற சூழலில் சிவராமின் இடைவெளி முன்பைவிட தற்போதுதான் எம்மை நிலைகுலையச் செய்கிறது.
இனஅழிப்பு அரசும் அனைத்துலக நாசகார சக்திகளும் தூர நோக்கில் அவரை இலக்கு வைத்ததன் காரணத்தை இப்போதுதான் நாம் முழுமையாக உணர முடிகிறது.

தராகி சிவராம் மட்டுமல்ல நாட்டுப்பற்றாளர் நடேசன், மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்.ரவிராஜ், சிவனேசன், முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு உட்பட பலரும் 2005, தொடக்கம் 2009, வரை இலக்கு வைத்து சிங்கள ஆட்சியாளர்களுடைய துணையுடன் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களை பயன்படுத்தி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலைகளுடன் ஊடாக தமிழ்தேசி அரசியல் வாதிகளையும், தமிழ்தேசிய ஆதரவாளர்ரகளையும் கிழக்கு மாகாணத்தில் அச்ச சூழலில் வைத்துக்கொண்டே கிழக்கை மாகாணசபை தேர்தல் 2008, ல் அவச அவசர மாக நடத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடாமல் பண்ணி பிள்ளையானை முதலமைச்சராக பதவி ஏற்க மகிந்த அரசு மேற்கொண்ட சதிகளில் இதுவும் ஒன்று என்பதே உண்மை.

ஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை உரக்கச்சொன்ன மிகவும் துணிச்சல் மிக்க ஊடகப் போராளியாக திகழ்ந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் ஆவர்.

‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும் பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்.” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1984 களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990 களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்.

இதில் வேடிக்கை என்னவெனில் அவர் 1984 தொடக்கம் 1990, வரை அவர் செயல்பட்ட புளட் இயக்கத்தாலேயே அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்ற செய்திகளே அவரின் படுகொலையின் சூத்திரகாரர்கள் என பரவலாக குற்றம் சாட்டப்பட்டபோதும் 18, வருடங்கள் கடந்தும் அவரின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை.

மாமனிதர் சிவராம் 28.04.2005,ல் இரவு கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்வதற்கு சரியா நான்கு நாட்களுக்கு முன்னர்  24.04.2005 அன்று வெளியான வீரகேசரி ஞாயிறு வாரஇதழில் அவர் எழுதிய இறுதிக்கட்டுரையான  ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்ட விடயங்களில் மிகமுக்கியமான ஒன்று இன்றைய காலத்திற்கு பொருந்துவதாக உள்ளது.

“எமதுபேராபத்தைப் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். 1976 இலேயே நாம் தனித் தமிழ் ஈழமே எமது சிக்கலுக்கு ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அன்று எமக்கிருந்த காரணங்களைவிட இன்று 29 ஆண்டுகள் கழித்து மிக வலுவான காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அப்போதிருந்த அரசியல் ஒருமைப்பாடு வெகுசன எழுச்சி முனைப்பு என்பன இன்று மழுங்கிக் காணப்படுகின்றன.

அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிப் போவதை நாம் காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு தீர்வு வரப்போகிறது என ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளும் இதில் ஒன்று என்பதுதான் உண்மை. நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மான உணர்வு மமக்களிடையே கூர்மையடைந்தமையாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது. அந்த அரசியல் எழுச்சியும் முனைப்புமே எமது போராட்டம் தடம்புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமானதொரு கூட்டாகி விடுவோம்.

எந்த ஒரு அரசும் அரசியல் ஒருமைப்பாடும் அறிவுமுள்ள ஒரு சமூகத்தை ஏமாற்றும்போது அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் முரண்பாடுகள் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இவ்வாறான முரண்பாடுகள் ஒருகட்டத்தை அடையும்போது அவை தமக்கெதிரான போராட்டங்களாக வெடிக்காமல் இருக்க அரசுகள் பலவழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று மாய எதிர்பார்ப்புகளை உண்டாக்குவதாகும்”

இவ்வாறு சிவராம் சாவதற்கு முன் இறுதியாக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இன்று சிவராம் படுகொலை செய்யப்பட்டு 18, வருடங்கள், போர் மௌனிக்கப்பட்டு 14, வருடங்கள் சென்றபோதும் இலங்கையில் ஆட்சிபீடம் ஏறியவர்களால் இனவாதமும் நில அபகரிப்பும் அவர்களின் உள்ளத்தில் இருந்து இன்னும் விலகவில்லை.

விடுதலைப்புலிகளை தோற்கடித்தோம் என 2009, மே,18,ல் பால்சோறும் கட்டச்சம்பலும் நாடுமுழுவதும் கொடுத்து கொண்டாடியவர்களும்,புலிகளை முற்றாக இல்லாமல் செய்ததாக கூச்சல் இட்டவர்களும் இன்றும் புலிகளின் பெயரை உச்சரிக்காமல் அவர்களால் ஆட்சிசெய்ய முடியவில்லை என்ற உண்மையை ஶ்ரீலங்கா பாராளுமன்றம் தற்போதும் உறுதிசெய்துள்ளது.

இதற்கான ஆதாரங்கள் நாடாளுமன்ற உரை தொகுப்பில்(கேன்சாட்) பார்கலாம். சிவராம் மறைவால் அவரின் உருவம் மறைந்தாலும் அவரால் எழுதப்பட்டவைகள் என்றும் மறையாது.