சிங்கப்பூரில் நாளை மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள மேலும் ஒரு மலேசிய இளைஞர்

மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் மரணதண்டனை

மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் மரணதண்டனை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார். இந்தத் தகவல் அவரது குடும்பத்தாரை நிலைகுலைய வைத்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த, அறிவுசார் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று தூக்கிலிடப்பட்ட நிலையில், மேலும் ஒரு மலேசியர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பது மலேசியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் மலேசியரான தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த மலேசியர் இறுதிக்கட்ட முயற்சியாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்தி சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் யாரும் இல்லை. அதனால் தமக்குத் தாமே வாதாட உள்ளார்.

காணொளி வசதி மூலம் நடைபெற உள்ள இந்த விசாரணையில், சிறையில் இருந்தபடியே பங்கேற்கிறார் தட்சிணாமூர்த்தி.

தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அந்த விசாரணை முடியும் முன்பு தம்மை தூக்கிலிடுவது சட்டப்படித் தவறு என்பதே அவரது வாதமாக உள்ளது.

45 கிராம் எடையுள்ள டயாமார்ஃபைன் என்ற போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்தார் என்று தட்சிணாமூர்த்தி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News