Tamil News
Home செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் 2019, ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு  பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (12/01/2023) வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதலைத் தவிர்ப்பதற்குத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உயர்நீதிமன்றம் வழங்கியது.

இதன்படி, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள்  பொலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கேற்ப, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் பொலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மிலலியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Exit mobile version