மகிந்த யாழ் வருகை – பௌத்த ஆக்கிரமிப்பைக் கண்டித்து யாழ் மாவட்டச் செயலகத்தை முடக்கிப் போராட்டம்

மகிந்த யாழ் வருகை

மகிந்த யாழ் வருகை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை எதிர்த்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், வடக்கு – கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களைக் கண்டித்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால்  இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் மேற்கொண்டனர்.

இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,

மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோருக்கான உள்ளக விசாரணையையும் , 1 இலட்சம் ரூபா இழப்பீட்டையும் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

அதே நேரம் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். Tamil News