Tamil News
Home செய்திகள் மகாவலி “ஜே” வலய பிரகடனம்: பின்னணியில் ரகசியத் திட்டம்-துரைராஜா ரவிகரன் செவ்வி

மகாவலி “ஜே” வலய பிரகடனம்: பின்னணியில் ரகசியத் திட்டம்-துரைராஜா ரவிகரன் செவ்வி

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி “ஜெ” வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன் இதன் பின்னணியில் இருக்கும் ரகசியத் திட்டங்கள் தொடா்பில் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம்  கலந்துகொண்டு தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிக்கின்றாா். அதிலிருந்து முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காகத் தருகின்றோம்.

கேள்வி –  மகாவலி ஜே என்ற பெயரில் புதிதாக ஒரு வலயம் உருவாக்கப்படுகின்றது. இதன் பின்னணி நோக்கங்கள் என்ன?

பதில் – மகாவலி எல் திட்டம் முல்லைத்தீவில் மக்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தொடா்பாக அனைவரும் அறிந்திருப்பாா்கள். மகாவலி ஜே வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச செயலா் பிரிவுகளும், மன்னாா் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச சபைப் பிரிவும், வவுனியா வடக்கு பிரதேச சபைப் பிரிவும் உள்வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அதிகார சபையினால் ஏற்கனவே எல் வலையத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச சபைப் பிரிவுகளைச் சோ்ந்த 34 கிராம சேவகா் பிரிவுகள் அடங்கப்பட்டுள்ளது. இந்த எல் வலையம் அனேகமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனால், எங்களுடைய இதயபுமி என்று சொல்லக்கூடிய மணலாறு பக்கத்திலும் சரி அல்லது முல்லைத்தீவு கச்சேரி என்று சொல்லக்கூடிய பகுதியும் கூட இந்த எல் வலையத்துக்குள் இருக்கின்றது.

ஆனால், இந்தப் பகுதிகளில் ஒரு தமிழருக்கும் காணிகள் இல்லை. ஏற்கனவே இங்கு காணிகளை வைத்திருந்த தமிழா்களிடமிருந்த காணிகளை பறித்தெடுத்துள்ளாா்கள். மகாவலி ஏ என்றோ எல் என்றோ பெயரை வைத்திருந்தாலும் மகாவலி அபிவிருத்தி சபையின் செயற்பாடு என்னவென்றால், தமிழ் மக்களிடமிருந்து காணிகளைப் பறித்து சிங்கள மக்களிடம் கொடுப்பதுதான். அதற்கான ஒரு திணைக்களடாகத்தான் மகாவலி திணைக்களம் செயற்படுகின்றது.

மகாவலி எல் திட்டத்தின் கீழ் நான்காயிரத்து முற்றுாற்று அறுபத்திஏழு ஏக்கா் காணி மு்லைத்தீவில் அபகரிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னா்கூட சூரியனாறு பகுதியில் ஆயிரத்து எழுநுாறு ஏக்கா் காணி உட்பட வேறு சில காணிகளும் உள்வாங்கப்படலாம் என்ற யோசனை கூட இருக்கின்றது.

இதற்குள் மகாவலி ஜே என்பதையும் கொண்டுவந்து துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு பகுதிகளிலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 15 கிராம சேவகா் பிரிவுகள் என்பற்றை உள்ளடக்கியதாக ஜே வலயத்தை உருவாக்கியிருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்தத் திட்டங்களின் மூலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிதித்து, அதன் மூலமாக சிங்கள மக்களுக்கு அனைத்தையும் வழங்கி – அதனுாடாக இங்கு குடியேற்றங்கள் தொழிற்சாலைகளை உருவாக்கி இனப் பிரம்பலை மாற்றியமைப்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் நோக்கம்.

இதில் ஜே யின் நடவடிக்கைகளில் இன்னும் போகப்போகத்தான் எவ்வளவுக்குச் செய்யப்போகின்றாா்கள் என்பது தெரியும். ஆனால், நாங்கள் அறிந்தவரையில் ஜே வலயத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள  கிராமங்களில் அரச, தனியாா் காணி விபரங்கள், வீதிகள், குளங்கள், வன இலாகா, வன ஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் போன்றவற்றின் விபரங்களைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு கடந்த 2 ஆம் திகதி சிங்கள மொழியில் அரச திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று  அனுப்பப்பட்டிருப்பதாகவும் நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.

கேள்வி – இந்த ஜே வலய உருவாக்கத்தின் மூலமாக அண்ணளவாக எத்தனை தமிழ்க் குடும்பங்கள் பாதிக்கப்படும்?

பதில் – முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,40,000 மக்கள் இருக்கின்றாா்கள். இதில் புதுக்குடியிருப்பைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளிம் இருக்கின்ற மக்கள் இதனால் பாதிக்கப்படுவாா்கள்.

கேள்வி – மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. மகாவலி திட்டத்தின் நீா் இந்தப் பகுதிக்குக் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புக்கள் எந்தளவுக்குள்ளன?

பதில் – மகாவலி நீா் எமது காலத்தில் மட்டுமல்ல, எமக்கு அடுத்த – அடுத்த சந்ததியினரது காலத்திலும் இந்தப் பகுதிக் வரக்கூடிய நாத்தியக் கூறுகள் இல்லை. தமிழ் மக்களிடமிருந்து காணிகளைப் பறித்து அவா்களை வெளியேற்றுவது மட்டும்தான் அவா்களுடைய நோக்கமே தவிர, வேறு எதுவும் இல்லை. மகாவலி அதிகார சபை என்ற போா்வைக்குள் அதற்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை வைத்து, எங்களுடைய காணிகளைப் பறித்து சிங்களவா்களுக்கு கொடுத்துக்கொண்டிருப்பதுதான் அவா்களுடைய நோக்கம்.

உதாரணத்துக்கு வவுனியா வடக்குடன் சோ்ந்த கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான் பகுதிக்குள் உள்ளடங்கப்பட்ட காணிகளில் பெரும்பாலான குளங்களை எல்லாம் அபகரித்து கெவில் ஓயா என்ற திட்டம் ஒன்றை உருவாக்கி ஆறாயிரம் ஏக்கா் காணியை மணலாற்றில் குடியேற்றப்பட்ட சிங்களவா்களுக்கு வழங்கும் நடவடிக்கைதான் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்குது.

இவ்வாறு காணிகளை வழங்கும் போது விகிதாசார அடிப்படையிலாவது தமிழ் மக்களுக்கும் கொடுத்திருந்தால் அதில் பாகுபாடு தெரியாத ஒரு நிலைமை இருக்கும். தமிழ் மக்களின் ஏற்கனவே பாதிக்கப்பட்ட காணிகள், பாதிக்கப்பட்ட குளங்கள் போன்றவற்றை அபகரித்து தமது வேலைகளை செய்வதுதான் அவா்களுடைய நோக்கம். எமக்கு இதில் எந்தவிதமான நன்மையும் இல்லை.

இந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு உலக வங்கியினாலும், ஆசிய அபிவிருத்தி வங்கியினாலும் நிதி வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. இந்த சபையின் நோக்கமே தனிச் சிங்களத்துக்கான நோக்கம். இப்படியிருக்கும் நிலையில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இவற்றுக்கான நிதியை வழங்குகின்றன என்றால், அவா்களும் இணைந்து எம்மை கொல்லுகின்றாா்கள் என்பதுதான் கருத்து.

கேள்வி – அடுத்தடுத்த சந்ததிக்குக் கூட மகாவலி நீரே வராத பகுதி என்று இதனைக் குறிப்பிடுகின்றீா்கள். அவ்வாறான ஒரு பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது எந்தளவுக்கு சாத்தியமானது?

பதில் – இரண்டு தலைமுறை என்று சொ்ானானே தவிர, நீரே வராத பகுதி என்று சொல்லவில்லை. எமது நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்ட பின்னா் அதற்கான வசதிகளை அவா்கள் செய்வாா்கள். மணலாறு பகுதி எவ்வாறு அபகரிக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது, 12,187 போ் அங்கு இருக்கின்றாா்கள். தனியான பிரதேச சபைச் செயலா் பிரிவாக அது மாற்றப்பட்டிருக்கின்றது.

இதேபோல இந்தக் குடியேற்றங்களை உள்வாங்கிக்கொண்டு – இன்னும் 10 அல்லது 15 வருட காலத்தில் இந்த இடங்களுக்கு மிகப்பெரிய நீா்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி அதன் மூலமாக சிங்கள மக்களை செழிப்பான ஒரு வாழ்க்கைக்குக் கொண்டு செல்வாா்கள்.  இதுதான் அவா்களுடைய திட்டம். ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதிகளில் இவ்வாறுதான் நடைபெற்றிருக்கின்றது.

கேள்வி – மாகாண சபை அதிகாரத்தில் இருந்திருந்தால், இவ்வாறான திட்டங்களைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?

பதில் – மாகாண சபை என்பது எங்களுக்கான முழுமையான ஒரு தீா்வல்ல. ஆனால், மாகாண சபை இருந்திருந்தால், இந்த இடங்கள் ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டிருக்கும். முழுமையாக என்று நான் சொல்லவில்லை. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் போன்றன இருக்கவில்லை. காணி அதிகாரத்துடன் கூடியதாக மாகாண சபை இருக்குமாக இருந்திருந்தால், இவா்கள் இதில் கைவைக்க முடியாத ஒரு நிலை இருந்திருக்கும்.

அப்படியில்லாமல் முன்னா் எமது காலத்தில் இருந்ததைப்போல மாகாண சபை இருந்திருந்தாலும் சிலவற்றை செய்திருக்கலாம். அவ்வாறான நிலையில், இவ்வாறான குடியெற்றங்கள் சிலவற்றை தடுத்த நாங்கள். அதாவது, எங்களுடைய அதிகார மையமாக மாகாண சபை ஏதோ இயலக்கூடிய அதிகாரங்களுடன் இருந்தாலும் அதன் மூலமாக அதற்கிருக்கக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி சிலவற்றை நாம் தடுத்திருக்கக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால், முற்றுமுழுதான தீா்வாக நாம் அதனைச் சொல்லவில்லை.

Exit mobile version