‘எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்தைய பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பில் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும்’ என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒவ்வொரு தேர்தல் முறைமையையும் அனுசரித்தே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்’.
‘தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானம் ஒற்றுமையாகவே எடுக்கப்பட்டது’.
‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய, தனித்த போட்டியிட்டால் தான் பின்னர் ஒன்றாக இணைந்து ஆட்சியமைக்க முடியும்’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘எனவேதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பங்காளிகளாக இருந்த கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்தி, புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு நேற்றைய (16) மத்தியக் குழுக் கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அந்தவகையில், தொழில்நுட்ப ரீதியில் எந்தெந்த பகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது அல்லது இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எட்டப்படும்’ என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.