உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட இடமளிக்க முடியாது – அநுரகுமார திஸாநாயக்க

உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால் எல்லை நிர்ணயம் திருத்தம் செய்ய வேண்டும் அதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் செல்லும். ஆகவே தேர்தல் முறைமை வரைபடத்தை குளறுப்படியாக்கி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர்.

2018ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலமாகவே, இவ்வாறு அதிக தொகையிலான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய தேர்தல் 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது மொத்தம் 4,486 உறுப்பினர்கள் தேர்வாகினர்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் இருந்த காலத்திலேயே, தற்போது நடைமுறையிலிக்கும் உள்ளுராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாகவே, உள்ளுராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை – இப்போது உள்ளவாறு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக அதிகரிக்கப்பட்டது.

அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய ஆட்சிக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொகையை, அவரின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் குறைக்க வேண்டுமெனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போதுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொகையைக் குறைப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர்தான், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அநுரகுமார திஸாநாயக்க,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமை திருத்தம் என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார்.

உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை குறைக்க வேண்டுமானால் எல்லை நிர்ணயம் திருத்தம் செய்ய வேண்டும் அதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் செல்லும். ஆகவே தேர்தல் முறைமை வரைபடத்தை குளறுபடியாக்க ஜனாதிபதிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.