Tamil News
Home செய்திகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத் தடை நீக்கம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத் தடை நீக்கம்

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு விமான பயணிகளுக்கான தடை பல நிபந்தனைகளின் கீழ் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் தெரிவித்தார்.

மேற்கூறிய 6 மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறி 2021 ஜூன் 28 அன்று சிவில் விமான போக்குவரத்து சபை அறிவித்தது.

எனினும் சில நிபந்தனைகளின் கீழ் அம்முடிவை இப்போது இரத்து செய்துள்ளதாக அச்சபை கூறியுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் கோவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் ஆகியவற்றின் அறிவுறுத்தல்களின் படி மேற்படி 6 நாடுகள் மீதான தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுகிறது.

நிபந்தனைகள் வருமாறு:

-வருகின்ற அனைத்துப் பயணிகளும் புறப்படுவதற்கு 96 மணி நேரத்துக்குள் பிசிஆர் சோதனையின் எதிர்மறை(-) முடிவை பெற்றிருத்தல் வேண்டும். விமான நிறுவனம், பயணிகள் ஏறுவதற்கு முன் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

-அன்டிஜென் சோதனைகளை புறப்படுவதற்கு முந்தைய சோதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

-சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள அரசாங்க அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை /ஆய்வுகூடத்திலிருந்து QR குறியீடு/BAR குறியீட்டுடன் பிசிஆர் சோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

-பயணிகள் முன்வைக்கும் சோதனை அறிக்கைகளின் நம்பகத் தன்மை மூலம் விமான நிறுவனங்கள் தம்மை திருப்திப்படுத்த வேண்டும்.

-ஹோட்டல் தனிமைப்படுத்தல் அல்லது இலங்கை சுற்றுலாசபையின் பயோ பபிள் வழியாக மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

மேலதிக அறிவித்தல் வரும் வரை இந்நிபந்தனைகள் பொருந்தும் என சிவில் விமான போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்தார்.

Exit mobile version