இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!

இந்தியப் பிரதமருக்கான கடிதம்
இந்தியப் பிரதமருக்கான கடிதம்: இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடும் தினம் முதலாம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பதே இதற்குக் காரணம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இணக்கம் ஒன்றை எட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சு நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் என்று அறிய வருகின்றது.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ முன்னெடுத்தது. இதில் தமிழ்த் தேசிய கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் என 11 கட்சிகள் ஒன்றிணைந்தன.

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் வரைவை இந்தக் கட்சிகள் கூடித் தீர்மானித்தன. இந்த வரைவு இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், கட்சித் தலைவர்கள் அநேகமாக இன்று கையொப்பமிடுவர் என்றும் இதன் ஒருங்கிணைப்பாளரும் வரைவை தயாரித்தவருமான ரெலோ கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முஸ்லிம் கட்சிகள் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட சில விவகாரங்களில் முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பு காட்டின. இதனால், உட்கட்சி முரண்பாட்டை காரணம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடிதத்தில் கையொப்பமிடுவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவித்தது. எனினும், அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதேவிடயத்தையே மற்றொரு முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. எனினும், அந்தக் கட்சியின் செயலாளர் தாம் காலஅவகாசத்தை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரு கட்சிகளுடனும் பேச்சு நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். இந்தச் சந்திப்பு நாளை அல்லது நாளை மறுதினம் கொழும்பில் நடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை ஏற்பாட்டாளர்கள் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அறிய வருகின்றது. எனினும், இதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், மற்றொரு முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் தமக்கு இதுவரை அப்படி ஓர் அழைப்பு கிடைக்கவில்லை என்றும் கட்சியின் தலைவருக்கு கிடைத்தால் அது தொடர்பில் அவர் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கையொப்பமிடுவதில் தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் இரு நிலைப்பாடு தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அந்தக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா மறுத்துள்ளார். ரெலோவுடன் தமிழ் அரசுக் கட்சி இணைந்து எடுத்த முடிவில் கட்சி உறுதியாக நிற்கும் என்று அவர் தெரிவித்தார்.

Tamil News