தமிழின அழிப்புக்கு நீதி கோரி 7200 பன்னாட்டு அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம்

தமிழின அழிப்புக்கு நீதி

தமிழின அழிப்புக்கு நீதி மற்றும் சுய நிர்ணய உரிமையை ஐ.நா அங்கீகரிக்குமாறு கோரி 7200க்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடந்த வாரம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ் இனத்தின் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஐ.நாவில்  அங்கத்துவம் பெற்ற 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 7200க்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களே எவ்வாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

ஈழத் தமிழர்கள் கடந்த 20 வருடங்களாக தங்களது சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றனர்.

தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருப்பதற்கான நடவடிக்கையாகும்.

2009ம் ஆண்டு அறிக்கையில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் 2012ம் ஆண்டு மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப்புவினால் ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என உறுதி செய்யப்பட்டது.

பாடசாலைகளில் மருத்துவமனைகளில் மற்றும் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சிறீலங்கா போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா செயற்குழு தெரிவித்துள்ளது.

போர்முடிந்து 13 வருடங்கள் கடந்த நிலையில் ஐ.நா மனித ஆணையகத்தின் உள்ளக பொறிமுறை மூலமான பொறுப்பு கூறலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. சிறையில் பல வருடங்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையில் தமிழ் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை சிறைகளில் அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும். மேலும் இராணுவ மயமாக்கல், நில அபகரிப்பு, ஊடகவியலாளர் மீது தாக்குதல், மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துகின்றமை என தாக்குதல்கள் தொடந்த வண்ணமே உள்ளன.

ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள் தமது விசேட பிரதிநிதியை அனுப்பி இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கடிதம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Tamil News