“எம் பிள்ளைகளோடு எங்களைச் சாகவிடுங்கள்”. அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள் கூறுகிறார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள்: எங்களுடைய பிள்ளைகளோடு இருந்து எங்களைச் சாக விடுங்கள் என அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள்  கூறியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இலக்கு ஊடகத்தினருக்கு கருத்துத் தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “இலங்கையில் கொரோனா தொற்றும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன.

இந்த நிலையில் அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள், எங்களுடைய பிள்ளைகளை நீண்ட நாட்களாக காணமுடியாமல் இருக்கின்றது. அவர்களுடைய முகங்களை நாங்கள் பார்ப்போமா? என்று தெரியாமல் இருக்கின்றது  என கூறுகின்றனர்.

ஏனெனில், வயது முதிர்ந்த நிலையிலே பிள்ளைகளின் கவலையோடு இருப்பவர்கள்,  கொரோனா தொற்றுக்குள்ளாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான் பெற்றோர் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்த ஆதங்கம் அரசாங்கத்திற்கு எட்டப் போவதில்லை. ஏனென்றால் அண்மையிலே ஜனாதிபதி ஒரு குழுவினை அமைத்திருக்கின்றார். பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழே கைது செய்யப் பட்டுள்ளவர்கள் தொடர்பாக ஒரு குழு அமைத்து,  அவர்களுடைய ஆலோசனை பெற்று அதன்பின் நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜெனிவா கூட்டதொடர் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அவர்களை ஏமாற்றுவதற்காக தான் இந்த குழு அமைக்கப் பட்டிருக்கிறது.

எனவே பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுகின்ற அதேநேரம், தற்போது இருக்கின்ற சூழ்நிலைக்கு கீழே இவர்கள் விடுதலை செய்வதற்கு ஊடாக தமிழ் மக்கள் மத்தியிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம்” என்றார்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021