ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான முடிவு- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆப்கானிலிருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான முடிவு: ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான, சிறந்த முடிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கான் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, ஜோ பைடன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகால போரை முடித்துக் கொண்டு அமெரிக்க இராணுவம் முற்றிலுமாக வெளியேறியது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இராணுவத் தளபாடங்கள் தற்போது தலிபான்கள் கைவசம் சென்றுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க வரலாற்றில் போரிலிருந்து விலகும்போது இவ்வளவு மோசமாக கையாளப்பட்டதில்லை என்று கூறினார். இந்த பலவீனமான திரும்பப் பெறுதல் போன்ற முட்டாள் தனத்தை இதுவரை யாரும் நினைத்ததில்லை என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவிற்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலியும் கண்டனம் தெரிவித்துள்ளார். பைடனின் சொந்த கட்சியினரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இராணுவ விலகல் குறித்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பைடன், ஆப்கானில் இருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான, சிறந்த முடிவு என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் போரைத் தொடர்ந்திருக்க வேண்டும் என கூறுபவர்களிடம் நான் கேட்கிறேன். போரைத் தொடர்வதில் என்ன தேசிய நலன் உள்ளது? என்னைப் பொறுத்தவரை, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானை இனி பயன்படுத்தக் கூடாது என்பதை மட்டுமே நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா, ட்ரம்ப் ஆகிய முன்னாள் அதிபர்களை நினைவுகூர்ந்த ஜோ பைடன், இந்த பொறுப்பை ஐந்தாவதாக ஒரு அதிபருக்கு கடத்தப் போவதில்லை என்று கூறினார். மிகவும் நீண்ட ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்ததாகவும், தற்போது அதை நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் நலனுக்கு பயன்படாத போரில் தொடர விருப்பவில்லை என்றும் அமெரிக்காவிற்கு வேறு பல புதிய சவால்கள் காத்திருப்பதாகவும் பைடன் கூறினார்.

இதனிடையே, தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ் தானிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலைவனத்தை கடந்து ஈரான் மற்றும் துருக்கி நாடுகளை நோக்கி நடந்தே செல்கின்றனர். முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என ஏராளமானோர் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளில் தஞ்சமடைய பயணப்பட்டு வருகின்றனர்.

ilakku-weekly-epaper-144-august-22-2021