ஒன்றிணைத்துப் பாதுகாப்பதே தலைமைத்துவம்

இலக்கு மின்னிதழ் 141 இற்கான ஆசிரியர் தலையங்கம்

சிறீலங்காவில் ஈழத் தமிழினத்தின் இருப்பையும், அடையாளத்தையும் இல்லாது ஒழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் 1921 முதல் கடந்த ஒரு நூற்றாண்டாக தமது அரசியற் செயற் திட்டமாக முன்னெடுத்து வருகின்றன.

பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் 1921இல் சட்ட நிரூபண சபையில் சிங்களப் பெரும்பான்மை வழி சட்டவாக்கங்கள் நடைபெறுவதற்கு வழி செய்த ‘மன்னிங்’ அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது.

இதன் விளைவாக தமிழர்களுக்குத் தங்களது தாயகத்தில் தங்களது இறைமையை சிங்களவர்கள் மேலாண்மை செய்யும் நிலை வளரத் தொடங்கியது. நூறு ஆண்டுகளாக இலங்கையில் வாழ்விடம் கொண்ட மலையகத் தமிழ் மக்களுக்குத், தங்களால் உருவாக்கப்பட்ட பெருந் தோட்டத் துறையையே தனது பொருளாதார வளர்ச்சியின் அச்சாணியாகக் கொண்டிருந்த இலங்கையில், நாடற்றவர்கள் என்ற நிலை வளரத் தொடங்கியது. தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் சமத்துவமற்ற, அச்சப்பட்ட வாழ்வு தொடரத் தொடங்கியது.

இவைகளின் தொடர்ச்சியாகவே இன்று வரை இலங்கைத் தீவில் மூவகைத் தமிழ் பேசும் மக்களுக்குமான பிரச்சினைகள் அமைகின்றன.

ஆனால் இந்தக் காலனித்துவப் பிரச்சினைகளை அனைத்துலக நாடுகள், அமைப்புக்கள் தலையிட்டுத் தீர்க்க விடாது சிறுபான்மையினப் பிரச்சினை களாகவோ, இலங்கையின் இறைமைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் எதிரான பிரச்சினை யாகவோ சிறீலங்கா பரப்புரை செய்கிறது. மக்கள் போராட்டங்களைப் பயங்கரவாதப் போராட்டங்கள் என முத்திரை குத்துகிறது. உரிமைகளை மீளப் பெறும் முயற்சிகளை பிரிவினைவாதம் என திரிபுவாதம் செய்கிறது. இந்த உண்மைகளை இன்றைய உலகுக்கு உலகத் தமிழர்கள் விரைவாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்து ரைக்க வேண்டிய காலமிது.

இந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதியுடன் ஈழத் தமிழர்கள் தங்களுக்கான தன்னாட்சி உரிமையை மீட்டெடுப் பதற்கான அரசியல் போராட்டத்தைத் தொடங்கிய ஒரு நூற்றாண்டு நிறைவுக்கு வருகிறது. 15.08.1921 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் நிறுவப்பட்ட தமிழர் மகாஜனசபை “இலங்கையில் ஒவ்வொரு இனரீதியான சங்கமும் நாட்டின் தன்னாட்சியினால் தனது இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நலன்களை அடைவதற்காக உழைக்கின்றது. எமது தமிழ் மகாஜன சபையினது நோக்கமும் இதுவே” எனத் தெரிவித்ததாக அக்காலத்து உதயதாரகை பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியுள்ளது. “சிங்களச் சிங்கமும் தமிழ் ஆட்டுக் குட்டியும் அக்கம் பக்கமாய் படுக்கலாம். ஆனால் பின்னையது முன்னையதினால் விழுங்கப்படக் கூடாது” என சாதாரண தமிழ் மக்களுக்கு விளங்கக் கூடிய வகையில் தமிழரின் தன்னாட்சி உரிமை மீட்கப்பட வேண்டிய முக்கிய தேவையை அக்காலத்து அரசியல் தலைமைகளில் ஒருவராகிய ஜே.வி.பி செல்லையா எடுத்துரைத் திருந்தார்.

மக்களை ஒருங்கிணைத்து பாதுகாத்தல் என்னும் தலைமைத்துவம் 1921இல் தோன்றி  57 ஆண்டுகளின் பின்னர், 1978இல், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையிலேயே உருவான சீர் உடை அணிந்த முப்படையும், நிர்வாகமும், நீதிமன்ற அமைப்புக்களும் கொண்ட ஈழத்தமிழ் மக்களின் அரசு நோக்கிய அரசிலேயே அது முழுமை பெற்றது.

இந்த ஈழத்தமிழ் மக்களின் தலைமைத்துவத்தைக் கொண்ட அரசு நோக்கிய அரசை, உலக நாடுகளும், உலக அமைப்புக்களும், ஈழத்தமிழர்களின் பிரிக்கப்பட முடியாத அடிப்படை உரிமையாகிய வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில், அனைத்துலக சட்டங்களின் கீழ் ஏற்காது தவறு செய்தன.

இதன் விளைவாகவே சிறீலங்காவால் 2009 இல், 21ஆம் நூற்றாண்டின் முதலாவது மனிதப் படுகொலை என உலக வரலாறே பதிவு செய்துள்ள முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் ஈழத்தமிழர்களின் தாயகப் பகுதிகளில் தனது படைபல ஆட்சியை மீளவும் நிறுவ முடிந்தது.

ஈழத் தமிழர்களின் விடயத்தில் அனைத்துலகச் சட்டங்களைச் சிறீலங்கா மீறிய பொழுது, அதனை உலக நாடுகளும், அமைப்புக்களும் தங்களது இராணுவ நலன் களுக்காகவும், சந்தை நலன் களுக்காகவும் தடுக்காது ஊக்குவித்ததன் விளைவாக, 2009 முதல் இன்று வரை, சிறீலங்காவின் பௌத்த சிங்களவாத பேரினவாத ஆட்சியாளர்கள், தங்களது இராணுவ நலன்களுக்காகவும், சந்தை நலன்களுக்காகவும், உலக நாடுகளதும் அமைப்புக்களதும் அனைத்துலகச் சட்டங்களை மீறி நடக்கும் உலக அரசாங்கமாகத் தன்னை நிலை நிறுத்தி வருகிறது. இதனால் உலகின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் நாடாக கோவிட் 19இற்குப் பின்னரான காலத்து உலகின் புதிய ஒழுங்குமுறையில் சிறீலங்கா தொடரும் என்பதே கோவிட்டுக்குப் பின்னரான இன்றைய உலக அரசியலின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகி வருகிறது.

சிறீலங்காவின் சீனசார்பு நிலை காரணமாக இலங்கை சீனாவின் புதிய காலனித்துவ நாடாக மாறி வருகிறது. யாழ்ப்பாணத்தில் இராணுவம் தமிழர்களின் நிலங்களைத் தனது தேவைக்காக கையகப் படுத்திய கடந்த வார முயற்சி யொன்றில், சீனர் ஒருவர் தனது நிலங்களும் அதனுள் அடங்குகிறது, அதற்காக நிலத்தை அளந்து, தனக்கான நட்டஈட்டைத் தரவேண்டுமென விடுத்த கோரிக்கையானது, சீனர்கள் சிறீலங்காவின் வாழ்விடக் குடிகளாகவும் உரிமை கோரும் நிலை தோன்றி விட்டது என்பதை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது.

இந்நிலையில் சிறீலங்காவை அடித்துக் கையாள முடியாது என்பதால் கொடுத்துக் கையாளுவோம் என்னும் நிலையில் பொருளாதார உதவிகளை நிதி அளிப்பு க்களாகவும், கடன்களாகவும் வாரிக் கொடுத்தும், அரசியல் நிலைப்பாடுகளில் சிறீலங்காவுக்குச் சாதகமாக நின்றும், தங்கள் இருப்பை இலங்கைத் தீவிலும் அதனைச் சுற்றியுள்ள இந்துமா கடல் பகுதிகளிலும் தக்க வைக்க உலக நாடுகள் அரும்பாடு படுகின்றன.

இத்தகைய இன்றைய அரசியல் பொருளாதார சூழலில் தாயகத்திலும், உலகம் எங்கும் ஈழத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, பாதுகாத்து அவர்கள் நூறாண்டுகளாக மீட்கப் போராடி வரும் அவர்களின் தன்னாட்சி அரசியல் உரிமைகளை அவர்கள் அடைய சனநாயக வழிகளில் உழைப்பதே ஈழத் தமிழர்களின் தலைமைத்துவமாக முன்னெடுக்கப் படல் வேண்டும்.

ilakku-weekly-epaper-140-july-25-2021