லசந்த படுகொலை வழக்கு ஹெய்க் மக்கள் தீர்பாயத்துக்கு; ஊடக சுதந்திர அமைப்புக்கள் கொண்டு செல்கின்றன

படுகொலை வழக்கு
இலங்கையின் புகழ்பெற்ற ஊடகவியலாளரும், சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு விவகாரத்தை உலகின் முன்னணி ஊடக சுதந்திர அமைப்புகள் ஹேய்க்கிற்கு கொண்டு சென்றுள்ளன. இதற்காக மக்கள் தீர்ப்பாயம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

லசந்தகொலை குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் நோக்கத்துடன் முன்னணி ஊடக சுதந்திர அமைப்புகள் மக்கள் இந்தத் தீர்ப்பாயத்தை உருவாக்கியுள்ளதாகவும், தீர்ப்பாயத்தின் விசாரணைகள் நவம்பர் இரண்டாம் திகதி ஹேய்க்கில் ஆரம்பமாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸிலிருந்து செயற்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு, பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பு, Free Press Unlimited ஆகிய அமைப்புகள் பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பில் மக்கள் தீர்ப்பாயத்தை ஆரம்பிக்குமாறு நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை கேட்டுக்கொண்டுள்ளன.

பொதுமக்கள் தீர்ப்பாயங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் நியாயபூர்வமான ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் நாடுகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துகின்றன. பொதுமக்கள் தீர்ப்பாயங்கள் பாதிக்கப்பட்டவர்களை வலுப்படுத்துவதுடன் அவர்களுடைய வாக்குமூலங்களை பதிவுசெய்கின்றன.

பத்திரிகையாளர்கள் தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் லசந்த விக்கிரமதுங்க மெக்சிக்கோவின் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் வெலாஸ்கோ சிரியாவின் நபில் அல்சர்பார்ஜி கொலைகள் தொடர்பில் நீதியை வழங்க தவறியமை தொடர்பில் இந்த நாடுகளிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல்செய்யும்.

இதேவேளை, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள மக்கள் தீர்ப்பாயத்திற்கு லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்ஸா விக்கிரமதுங்க தனது முழு ஆதரவையும் வெளியிட்டுள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021