பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்: முன்னணியில் அமெரிக்கா

பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்

தமிழில் ஜெயந்திரன்

பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்: முன்னணியில் அமெரிக்கா – கடந்த 5 வருட காலத்தில் தனது உலகளாவிய ஆயுத விற்பனையை 37 சதவீதத்தால் அமெரிக்கா அதிகரித்திருக்கிறது என்று சுவீடனைத் தளமாகக் கொண்ட ஓர் ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளின் ஆயுத ஏற்றுமதி அதிகரித்திருக்கும் அதே நேரம் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் ஆயுத ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்பனிப்போர் நிறைவுற்ற காலத்திலிருந்து ஆயுதங்களின் ஏற்றுமதியும் இறக்குமதியும் உச்ச நிலையிலேயே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் தற்போதைய கோவிட் பெருந் தொற்று இந்த நிலையை மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது, மத்திய கிழக்கு நாடுகளே ஆயுதங்களை மிக அதிக அளவில் இறக்குமதி செய்திருக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக ஆயுத விற்பனையில் மிகவும்  விரைவான வளர்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்தப் போக்கு ஒரு முடிவுக்கு வந்து விட்டதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று இவ்விடயம் தொடர்பான தகவல்களைத் திரட்டிய சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்கோமில் அமைந்திருக்கின்ற பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனத்தின் (Stockholm International Peace Research Institute) முதன்மை ஆய்வாளரான பீற்றர் (Pieter Wezeman) தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திவரும் பொருண்மியப் பாதிப்புகள் காரணமாக எதிர்வரும் ஆண்டுகளில் சில நாடுகள் தமது ஆயுத இறக்குமதியை மீள்பரிசீலனை செய்யக்கூடும்.

ஆனால் அதே நேரத்தில் 2020ம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று உச்சநிலையில் இருந்த போதே, உலகின் பல நாடுகள் சில முக்கிய ஆயுதங்களைப் பெறுவதற்காக பெரும் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கின்றன.

AP21052435394958 பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்: முன்னணியில் அமெரிக்கா

முதல் ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2016 – 2020 காலப்பகுதியில் பன்னாட்டு ரீதியிலான ஆயுத விற்பனை நிலையாகவே இருந்திருக்கிறது என்று மேற்படி ஆய்வு நிறுவனமான சிப்ரி (Sipri) தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் ஆயுத விற்பனையின் ஏறத்தாழ அரைப்பங்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றிருக்கிறது. இதில் அமெரிக்காவின் மொத்த ஆயுத ஏற்றுமதியின் 24 சதவீதத்தை சவூதி அரேபியா மட்டும் பெற்றிருக்கிறது.

உலகிலேயுள்ள 96 அரசுகளுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வருவது மட்டுமன்றி, கடந்த 5 ஆண்டுகளில் தனது உலகளாவிய ஆயுத விற்பனையை அமெரிக்கா கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது.

பிரான்சு தனது முதன்மை ஆயுத ஏற்றுமதியை 44 சதவீதத்தால் அதிகரித்திருக்கும் அதே வேளை, ஜேர்மனி 21 சதவீதத்தால் தனது ஆயுத விற்பனையை விரிவாக்கியிருக்கிறது.

அதே நேரம் இஸ்ரேலும், தென்கொரியாவும் தமது ஆயுத ஏற்றுமதிகளை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கின்றன. ஆனால் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தளவில் இந்த இரு நாடுகளின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது.

மத்திய கிழக்கில் அதிகரித்திருக்கும் ஆயுத இறக்குமதி

ஆயுத இறக்குமதிமிக விரைவாக வளர்ந்துகொண்டிருக்கின்ற ஆயுதச் சந்தையாக மத்திய கிழக்கு தற்போது மாற்றம் பெற்றிருக்கிறது. முதல் 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2016 – 2020 காலப்பகுதியில் 25 சதவீதம் அதிகமாக ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.

சவூதி அரேபியா (61 %), எகிப்து (136 %), கட்டார் (361 %) போன்ற நாடுகள் மிக அதிகமான ஆயுத இறக்குமதிகளை மேற்கொண்டிருக்கின்றன.

நாற்பத்து இரண்டு (42) சதவீதமான பங்கை வகித்து, உலகளாவிய வகையில் மிகப் பெரிய ஆயுதப் பரிமாற்றங்கள் நிகழும் பிரதேசமாக ஆசியா (Asia), ஓசியானியா (Oceania)  பிரதேசங்கள் திகழ்கின்றன.

இந்தியா, அவுஸ்திரேலியா, தென் கொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளே இப்பிரதேசத்தின் முக்கிய ஆயுத இறக்குமதி நாடுகளாகும்.

ஆயுதச் சந்தையில் குறைந்துவரும் ரஷ்யா, சீனாவின் பங்கு

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஆயுத ஏற்றுமதி தற்போது கணிசமான அளவு குறைந்து வருகிறது. ஆனால் ஆபிரிக்காவின் சஹாராப் பிரதேசத்தில் உள்ள நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்கின்ற முக்கிய நாடுகளாக இந்த இரு நாடுகளும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் 22 சதவீத வீழ்ச்சியை தற்போது அவதானிக்க முடிகிறது. இந்தியாவுக்கான ரஷ்யாவின் ஏற்றுமதி 53 சதவீதம் குறைவடைந்ததே இதற்கான முதன்மைக் காரணமாகும்.

உலகின் பாரிய ஆயுத ஏற்றுமதிஅண்மைக் காலமாக பல அரசுகளுடன் பல பெரிய ஆயுத ஒப்பந்தங்களை ரஷ்யா மேற்கொண்டிருக்கிறது. சிலவேளைகளில் எதிர்வரும் ஆண்டுகளில் அதன் ஆயுத ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் உலகின் பல பிரதேசங்களில் அது அமெரிக்காவுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது  என்று சிப்ரியின் பிறிதொரு ஆய்வாளரான அலெக்சாண்ட்ரா குல்மோவா (Alexandra Kulmova) தெரிவித்தார்.

உலகின் பாரிய ஆயுத ஏற்றுமதி நாடுகளில் 5வது இடத்தை வகிக்கின்ற சீனாவின் ஏற்றுமதிகள் 7.8 சதவீதத்தால் வீழ்ச்சியுற்றிருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், அல்ஜீரியா போன்ற நாடுகள் சீனாவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி.கொம்

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்: முன்னணியில் அமெரிக்கா