Home ஆய்வுகள் நிலவுடைமையும் மழுங்கடிப்பும் – துரைசாமி நடராஜா

நிலவுடைமையும் மழுங்கடிப்பும் – துரைசாமி நடராஜா

234 Views

துரைசாமி நடராஜா

ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு வலுச் சேர்க்கும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இவற்றுள் நிலவுடைமை என்பது முக்கியத்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது.

இந்த வகையில் இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில், மலையக சமூகம் நிலவுடைமையற்ற ஒரு சமூகமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். இச்சமூகம் நிலவுடைமை மற்றும் வீட்டுடைமைச் சமூகமாக மேலெழும்ப வேண்டும் என்ற கோரிக்கைகளின் அழுத்தங்கள் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன.

எனினும் இக்கோரிக்கைகள் மழுங்கடிக்கப்பட்டு வரும் நிலையில், பெருந்தோட்ட நிலங்களை பறித்தெடுத்து, வெளியாரின்  ஊடுருவலுக்கு வலுசேர்க்கும் நிலைமைகளே அதிகரித்து வருகின்றன.  இச்செயற்பாடுகள் இன்னும் முற்றுப் பெறுவதாக இல்லை. இதனிடையே அண்மையில் கண்டிப் பகுதியில் உள்ள தேயிலைக் காணியினைப் பாற்பண்ணை வேலைத் திட்டத்திற்காக சுவீகரிக்க முற்படும் செயற்பாடுகளைப் பலரும் கண்டித்துப் பேசி வருவதனையும்  காண முடிகின்றது.

மலையகத்தில் இத்தகைய நடவடிக்கைகளின் பின்புலத்தில் இனவாதம் மறைந்து நிற்பதாகவும், சிலர் பேசிக்கொள்கின்றனர். பெருந்தோட்டக் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கப்படுதல் வேண்டும். இந்நிலையில் வெறும் அறிக்கைகளுக்கு அப்பால்,  ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் மலையக அரசியல், தொழிற்சங்கவாதிகளும், சிவில் அமைப்புக்களும் தமது பங்களிப்பினை வழங்க வேண்டிய ஒரு தேவை மேலெழுந்திருக்கின்றது.

இத்தகைய நடவடிக்கைகள் சமூகத்தின் இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள உந்து சக்தியாக அமையும் என்பதோடு, வெறும் அறிக்கைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் ஆளுமைமிக்க தனித்துவமான சமூகம் என்றபோதிலும், இவர்கள் இன்னும் சீந்தப்படாத, நாதியற்ற ஒரு சமூகமாகவே இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும். இந்நாட்டில் இருநூறு வருடகால வரலாற்றினைக் கொண்டுள்ள இம்மக்களின் வரலாற்றுக்கும், வாழ்க்கை அபிவிருத்திக்கும்  இடையே நீண்ட விரிசல் நிலை இருப்பதையே அறிந்து கொள்ள முடிகின்றது.

இவர்களின் உரிமைகள் பலவும் மறுக்கப்பட்டும், மழுங்கடிக்கப்பட்டும் வருகின்ற நிலையில், இவர்களின் பல்துறை அபிவிருத்தி என்பது கானல் நீராகி வருகின்றது. ஒரு சமூகம் நாகரீகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மேலெழும்புவதற்கு வீடும், நிலமும் உடைமையாக இருத்தல் வேண்டும் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.எனினும் இவை இரண்டுமே இல்லாத நிலையில், பெருந்தோட்டச் சமூகம் நாளுக்கு நாள் பின்னடைவு கண்டு வருகின்றது.

உரிமைகளை கொடுக்காவிட்டாலும், உள்ளதையும் பறித்தெடுக்கின்ற ஒரு கலாசாரமே இங்கு நிலவி வருகின்றமை வேதனைக் குரியதாகும். மலையக மக்களுக்கு எதனையும் அள்ளிக் கொடுக்கா விட்டாலும், கிள்ளியாவது கொடுப்பதற்கும் கூட யாரும் தயாராக இல்லை. பெருந்தோட்ட மக்களை நிலவுடைமைச் சமூகமாக மாற்றும் கோரிக்கைகள் செயல் வடிவம் பெறாத நிலையில், பெருந்தோட்ட நிலச் சுவீகரிப்பு என்பது ஒரு தொடர் கதையாகி வருகின்றது.

சட்டமும் காணிச் சுவீகரிப்பும்

1972ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1972 முதல் அமுல்படுத்தப்பட்ட காணி உச்சவரம்புச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளின் உடைமைகளுக்கு உச்சவரம்பு விதிக்கப் பட்டது. நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 10 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியுடைமைகளும், பெருந்தோட்டப்  பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 20 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியார் உடைமைகளும் நிலச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், 1972 காணிச் சுவீகரிப்பு நடவடிக்கையின்போது சிறியளவு பெருந் தோட்டக் காணிகளையே சுவீகரிக்கக் கூடியதாக இருந்தபோதும், பின்னர் வந்த காலப்பகுதியில் பெருமளவு பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிப்பிற்கு உள்ளாகின. 1972 – 1975 வரையான காலப்பகுதியில் 169,208 ஹெக்டேர் தேயிலைத் காணிகள் அரசுடைமை யாக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனையன சிற்றுடைமை யாக்கப்பட்டன.

தோட்டங்களில் உற்பத்தித் திறனை அதிகரித்தல், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவித்து நிலம் வழங்கி அவர்களின் மத்தியில் பொருளாதார சமத்துவ நிலைமைகளை உருவாக்குதல், வெளிநாட்டார் இலாபத்தை தமது நாட்டிற்கு எடுத்துச் செல்வதைத் தடை செய்தல்  என்பன காணிச் சுவீகரிப்பின் பிரதான நோக்கங்களாக இருந்தது. எனினும் முதல் இரண்டு நோக்கங்களையே அரசியல்வாதிகள் பிரதானமாகக் கருதிச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

காணிச் சுவீகரிப்பானது கம்பளை, புசல்லாவை  ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 26000 ஏக்கர் தேயிலைத்  தோட்டங்களில் தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பல தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு, இருப்பு கேள்விக்குறியானது. நிர்க்கதி நிலையில் இருந்த தொழிலாளர்கள் அடி, உதைகளுக்கும் உள்ளாகினர். பல தொழிலாளர்கள் போக்கிடமின்றியும், வருவாயின்றியும் கம்பளை போன்ற நகரப் பகுதிகளில் பிச்சைக்காரர்களாகச் சுற்றித் திரிந்த வரலாறு கண்களைக் குளமாக்குவதாகும்.

இது குறித்து அப்போது முக்கிய அரசியல்வாதியாக இருந்த ஒருவரிடம் தொழிலாளர்கள் முறையிட்டபோது, ஒரு பெரும் நிலப்புரட்சி நடக்கின்றது. இந்நிலையில் நீங்கள் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஆறுதலாக பதிலளித்திருக்கின்றார். தொழிலாளர்களின் வலிகளை அவர் புரிந்து கொள்ளவில்லை. நிலச் சீர்திருத்தத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்விதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்ளாத நிலையில், தோட்டங்களை அண்டிய வெளியார்களுக்கே காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பெருந்தோட்ட நிலங்களை சுவீகரிப்பதென்பது இனவாதிகளுக்கு கரும்பு சாப்பிடுவது போன்ற ஒரு நிலையாகும். இதன் தொடர்ச்சி இன்னும் ஓயவில்லை. பதுளை, மாத்தளை, கண்டி என்று நிலைமைகள் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வேலு குமார் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மு.சிவஞானம் உள்ளிட்டவர்கள் காணிச் சுவீகரிப்பிற்கு எதிராக தொடர்ச்சியாகவே குரல்கொடுத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் தற்போது கண்டிப் பகுதியில் நிலச் சுவீகரிப்புக்கான முனைப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

பால் அபிவிருத்தி என்னும் போர்வையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் நாட்டில் உள்ள பல பாற்பண்ணையைச் சுற்றியுள்ள நிலங்கள் பயனின்றிப் பற்றைக்காடாக இருந்து வரும் நிலையில், அரசாங்கம் கண்டிப் பகுதிக் காணியைக் குறிவைத்துத்துள்ளமை பல சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை 1980 இல் கண்டி, கம்பளை, உலப்பனை, கடுகண்ணாவை போன்ற பகுதிகளில் சுமார் 10,000 ஹெக்டேயர் காணிகள் பயனற்ற காணிகளாக இனங்காணப்பட்டன. இந்நிலத்தை மாற்றுப் பயிர்ச்செய்கை  நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப் போவதாக  அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், உலக வங்கியும் இதற்கான அனுசரணையை வழங்கி இருந்தது. எனினும் பின்னர் இக்காணிகள் கிராமப்புறச் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட கசப்பான வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

இத்தோட்டங்களில் வாழும் இந்தியத் தமிழர்களுக்கும் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மேலெழுந்த போதும், அது சாத்தியமாகவில்லை என்பதனையும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஏற்கனவே பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன இல்லாமையைக் காரணங்காட்டிக் காணி வழங்கல் நடவடிக்கைகளில் தோட்டத் தொழிலாளர்கள் புறந்தள்ளப்பட்டமையும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பெருந்தோட்ட மக்களின் காணியுரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், தோட்டப் புறங்களில் தரிசு நிலமாகக் காணப்படுகின்ற சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் காணிகளை இம்மக்களின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்குக் கூட தோட்ட நிர்வாகமும், நிறுவனங்களும் தயக்கம் காட்டி வருகின்றன என்பது வருந்தத்தக்க விடயமாகும். தேயிலைக்கே உழைத்து  உரமாகிப்போன ஒரு சமூகத்திற்கு அரசாங்கமும், நிறுவனங்களும் காட்டுகின்ற நன்றிக்கடன் இதுதானா? என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

பாதக விளைவுகள்

தோட்டப்புறக் காணிகளை வெளியாருக்குப் பகிர்ந்தளிக்கும் நிலைமைகளால் அண்மைக் காலத்தில் விருப்பத்தகாத விபரீதங்கள் பலவும் மேலெழுந்துள்ளன. இன முரண்பாடுகள், புரிந்துணர்வின்மை, கலாசாரச் சீர்கேடுகள் எனப் பலவும் இதனால் மேலெழுந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அரசாங்கம் இன்று பல தோட்டங்களை நிர்வகித்து வருகின்றது.

இத்தோட்டங்கள் இயல்பு நிலையில் இருந்தும் மாற்றம் பெற்றுள்ள நிலையில், தோட்டங்கள் பற்றைக் காடுகளாகி இருக்கின்றன. தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் இழுபறியான நிலைமைகளே இருந்து வருகின்றன. தோட்டங்களைப் பராமரிப்பதில் அரசாங்கம் எவ்விதமான கவனத்தையும் செலுத்துவதில்லை. இந்நிலையில், அரசாங்கம் கிராமப்புற விஸ்தரிப்பினை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாகவும், இதனாலேயே தன்னால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களைக் காடுகளாக்கி   கிராமப்புற விஸ்தரிப்பிற்கு வலுவூட்ட  முனைந்து வருவதாகவும் விசனங்கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்டத் தேயிலை விளைநிலங்கள் சுவீகரிக்கப்படுவதன் காரணமாக வேலை நாள் பாதிப்பு, வருமான வீழ்ச்சி, இருப்பு கேள்விக்குறியாதல் என்பன ஏற்படுகின்றன. மேலும் மக்களின் இடப்பெயர்வு நிலைமைகளால் அரசியல் பிரதிநிதித்துவ வீழ்ச்சி ஏற்படுவதோடு இதனால்   அரசியலில் எம்மவர்களின்  ஆதிக்கமும் கேள்விக்குறி யாகின்றது. இது இம்மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு உந்துசக்தியாக அமையும் என்பதும் தெரிந்த விடயமேயாகும்.

இதேவேளை பிராந்திய நிறுவனங்களுக்கு ஏற்கனவே 239,398 ஹெக்டேர் காணி  குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும், இதில் தேயிலை நிலங்கள் 94,244 ஹெக்டேர் எனவும், இறப்பர் நிலங்கள் 57,030 ஹெக்டேர் எனவும் தகவல் ஒன்றில் வலியுறுத்தப் பட்டுள்ளது. எனினும் அண்மைய கணக்கெடுப்பின்படி, இதில் இதில் 28.2 வீத இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

இதில் தேயிலை நிலங்களில் 16.3 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. உற்பத்தியில் செல்வாக்குச் செலுத்திய வளமான பகுதிகளே இவ்வாறு  இழக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் மேலும் வலியுறுத்துகின்றது. இத்தகைய நிலைமைகள் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேலும் அதள பாதாளத்தில் தள்ளிவிடுவதாகவே அமையும்.

நிலம் என்பது ஒரு சமூகத்தின் மிகப்பெரிய சொத்து, அங்கீகாரம்  எனவேதான் நிலத்தின் இருப்பினைப் பாதுகாக்கும் நோக்கில் உலகளாவிய ரீதியில் பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இலங்கையும் கூட இதில் விதிவிலக்காகி விடவில்லை. இலங்கை இதில் படிப்பினைகள் பலவற்றையும் பெற்றுக் கொண்டுள்ளது. இந்த வகையில் பெருந்தோட்ட நிலம் என்பது அம்மக்களின் அடையாளத்தின், ஆதிக்கத்தின் ஒரு அம்சமாகும். இந்நிலங்கள் இனவாதப் பின்புலத்தை மையப்படுத்தி சுவீகரிக்கப்படுவதையோ அன்றேல் வீணாக கையறு நிலையில் விடப்படுவதையோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

நிலத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை பேச்சளவில் அல்லாது செயலளவில் மேற்கொள்ள அனைவரும் முரண்பாடுகளை மறந்து கை கோர்க்க வேண்டும். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் என்றில்லாமல், அனைவரினதும் நியாயமான பங்களிப்பு இதில் அவசியமாகும். இதை விடுத்து  சொந்த நலன்களுக்காக சமூகத்தை காட்டிக் கொடுக்க முற்படுவோமானால் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமையும் என்பதனை மறந்து விடக் கூடாது.

1 COMMENT

  1. […] ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு வலுச் சேர்க்கும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இவற்றுள் நிலவுடைமை என்பது முக்கியத்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது.  […]

Leave a Reply

Exit mobile version