பின்தங்கிய குறிகாட்டிகள் – துரைசாமி நடராஜா

புதிய அரசியலமைப்பை விரைவில் முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது குறித்து விசேட அவதானம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படுமிடத்து மலையக மக்கள் பின்தங்கிய சமூகம் என்பதனை கருத்தில் கொண்டு இம்மக்களின அபிவிருத்திசார் சரத்துக்கள் பலவும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுேவேளை மலையக அரசியல்வாதிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இவ்விடயத்தில் தனது அதிகரித்த கரிசனையை வெளிப்படுத்துவதும் அவசியமாகும்.

அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய ஆவணமாகும்.அரசியலமைப்பில் ஏற்படும் குளறுபடிகள் நாட்டினை அதளபாதாளத்தில் தள்ளிவிடும் என்பதனை மறுப்பதற்கில்லை.இந்தவகையில் இலங்கையின் சமகால அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருவதும் தெரிந்ததாகும.நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்க வேண்டிய அரசியலமைப்பு அபிவிருத்திக்கு தடையாக இருந்து வருவதோடு ஐக்கியத்துக்கும் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக விமர்சனங்களுள்ளன.நாட்டின் சமகால அரசியலமைப்பு 1978 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது .

இந்த அரசியவமைப்பின்  தோற்றத்திற்கு பல்வேறு காரணிகள் வலுசேர்த்துள்ளன.முதலாவது குடியரசுஅரசியலமைப்பின் குறைபாடுகள், ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால இலக்குகள்,1977 இல் ஐ.தே.க.விற்கு கிடைத்த பெருவெற்றி என்பன இதில் பிரதான காரணிகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.1972 ம் ஆண்டின் திட்டமானது சோல்பரி அரசியல் திட்டத்தின் அடிப்படைகளையே கொண்டிருந்தது.இத்திட்டத்தில் காணப்பட்ட  அடிப்படை  உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள் போதிய சட்ட வலுவைக் கொண்டிருக்கவில்லை.இத்திட்டத்தின் ஊடான தேர்தல் முறை பல்வேறு குளறுபடிகளைக் கொண்டிருந்தது என்றெல்லாம் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அது புதிய அரசியலமைப்பின் தேவையை வலியுறுத்தியது.இதற்கேற்ப 1978 ம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்பட்ட நிலையில் இப்போது இந்த அரசியலமைப்பின் வலுவிழந்த தன்மை வெளிப்பட்டுள்ளது.

இவ்வரசியலமைப்பு ஒன்றுபட்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ளது. இவ்வரசியலமைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் பலரின் விசனப்பார்வைக்கு உள்ளாகியுள்ளது.இத்தேர்தல் முறைமையின் ஊடாக தேர்தலுக்கான செலவுகள் அதிகமாகும்.இதனால் ஊழல்கள் அதிகரிக்கின்றன.விருப்பு வாக்கு முறை பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. வேட்பாளர்களின் பிரசார எல்லை அதிகமாக காணப்படுகின்றது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இத்தேர்தல் முறைமைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன.இத்தகைய பல நிலைமைகள் 1978 ம் ஆண்டு அரசியலமைப்பினை புறந்தள்ளி புதிய அரசியலமைப்பின் தேவையை வேண்டி நிற்கின்றன.

இதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமிடத்து அது நாட்டின் சகல மக்களையும் அரவணைத்து செல்வதாகவும்,சகல மக்களினதும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் என்ற கருத்து எதிரொலிக்கின்றது.இந்தியாவில் பல்லின மக்களும் வாழுகின்றனர்.இந்நிலையில் அங்குள்ள அரசியலமைப்பு சகலரையும் அரவணைத்துச் செல்வதாகவுள்ளது.                 இதன் முன்னுரையில் “இந்தியா ஒரு இறைமையுள்ள, சமதர்ம மதச்சார்பற்ற சனநாயக குடியரசாகும்.இது நாட்டின் சகல பிரசைகளின் நீதியையும் , சுதந்திரத்தையும், சமத்துவம் மற்றும் தோழமையையும் பாதுகாக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இவை குறித்த சிந்தனைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே 1995, 1997, 2000, 2018 ம் ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு குறித்த வரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றை அடியொற்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய அரசியலமைப்பு நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில் பின்தங்கிய நிலையிலுள்ள மலையக மக்கள் எதிர்கொள்ளும்  பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.மலையக மக்களின் பின்தங்கிய நிலைமைகளை பல்வேறு தேசிய, சர்வதேச ஆய்வுகளும் வெளிப்படுத்தியுள்ளன. தோட்டப்பகுதி மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையைப்பற்றி ஆராய்வதற்கென்று 1992 ம் ஆண்டில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இவ்வாணைக்குழு தனது அறிக்கையில் பல்வேறு விடயங்களில் அம்மக்கள் பின்தங்கியுள்ளதாக தெளிவுபடுத்தி இருந்தது.குடியுரிமை,தொழில் வாய்ப்புக்கள், கல்வி, தொழிற்பயிற்சி,வீட்டுவசதியும் சுகாதாரமும்,சமூகநலன் பேணல், மின்சார வசதி,தொடர்பாடல் வசதிகள்,சமூக மற்றும் கலாசார மேம்பாடு, விளையாட்டு, பொழுதுபோக்கு என்பவற்றுக்கான வசதிகள், பிரதான தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் என்பவற்றில் இம்மக்கள் பின்தங்கியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியது.இம்மக்ளின் ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட நிலைமைகள் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளன.

அத்தோடு பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகை தந்து அடுத்த ஆண்டுடன் இருநூறு வருடங்கள் ஆகும் நிலையில் இம்மக்கள் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை இல்லாத ஒரு சமூகமாகவே இன்னும் இருந்து வருகின்றனர்.ஆட்சியாளர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மை இதற்கு ஏதுவாகியுள்ள நிலையில் பெரும்பான்மை அரசியல்வாதிகள் கூட ஆட்சியாளர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையை கண்டித்துப் பேசியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இந்நிலையில் மலையக மக்களின் எழுச்சி கருதி காத்திரமான நடவடிக்கைகள் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்படுவதோடு அரசியலமைப்பு ரீதியான உறுதிப்பாடுகளும் அவசியமாகும்.

மலையக மக்களின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இவற்றை தீர்த்து வைக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.”புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு மிகவும் தேவையானவொன்றாகும் .

காலிமுகத்திடலில் இளைஞர்கள் மூன்று மாதத்திற்கும் மேலாக நடாத்திய போராட்டத்திலும் புதிய அரசியலமைப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு சமகால அரசியலமைப்பு மூலகாரணமாக இருந்து வருகின்றது.இவ்வரசியலமைப்பின் ஊடாக.அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி முறை இந்நிலைமைக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளது.எனவே பொறுப்பு கூறக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தினை கொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சியினை நாட்டுக்கு கொண்டு வர வேண்டிய தேவையுள்ளது.பாராளுமன்ற அரசாங்க முறையை நோக்கி நகர வேண்டியதும் அவசியமாகும்.இந்த பின்புலத்தில் புதிய அரசியலமைப்பு இலங்கைக்கு தேவையாகவுள்ளது.

இது ஒரு புறமிருக்க சிறுபான்மை மக்களின் அபிவிருத்திக்காகவும் புதிய அரசியலமைப்பு மிகவும் தேவையானதாகவுள்ளது.இலங்கையில் முப்பதாண்டு காலமாக கொடிய யுத்தம் இடம்பெற்றது.தமிழ் மக்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை.இக்காயங்கள் ஆற்றப்படுதல் வேண்டும்.எனவே இனியும் இழுத்தடிக்கப்படாது உரிய அரசியல் தீர்வு இம்மக்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.இதேவேளை மலையக மக்களை எடுத்துக் கொண்டால் எல்லா அபிவிருத்தி குறிகாட்டிகளிலும் இவர்களின் நிலைமை திருப்தி தருவதாக இல்லை.இதனைவைத்து நோக்குகையில் புதிய அரசியலமைப்பு இம்மக்களின அபிவிருத்தி கருதி சில ஏற்பாடுகளை கொண்டிருக்க வேண்டும்.இந்த சமூகத்தை எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்று பலரும் இப்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கேற்ப பெரும்பாலான இந்திய தமிழர்கள் ஏற்கின்ற ஒரு அடையாளத்தை புதிய அரசியலமைப்பிலே முன்வைக்க வேண்டும்.புதிய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தை கொண்டு வருகின்றபோது அதில் மொழியுரிமை, கல்வியுரிமை,வீட்டுரிமை, காணியுரிமை,சுகாதாரத்துக்கான உரிமை  என்பன அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்வாங்கப்பட்டு வேண்டும்.இவை மிகவும் முக்கியமான சமூக உரிமைகளாகும். இவை அடிப்படை உரிமைகளாக உள்வாங்கப்படுமிடத்து மலையக சமூகம் உட்பட ஏனைய சமூகங்களும் நன்மையடைய  முடியும்.

உலகில் பின்தங்கிய சமூகங்களின் அபிவிருத்தி கருதி அரசியலமைப்பு ரீதியாக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்தவகையில் மலையக சமூகத்தின் பின்தங்கிய நிலைமைகளை மேம்படுத்த குறைதீர் நடவடிக்கைகளை புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்த வேண்டும்.இவை 15 அல்லது 20 ஆண்டுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்தியாவிலே பிற்பட்ட மக்களுக்கு நேரொத்த நடவடிக்கை நடைமுறையில் உள்ளது.இத்தகைய நேரொத்த நடவடிக்கையினை இலங்கையில் மலையக மக்களுக்காக கொண்டு வரலாம்.இலங்கை அரசினால் வழங்கப்படும் பொதுச் சேவைகள் இம்மக்களுக்கு எட்டாக்கனியாகவுள்ளன.தோட்டக் கட்டமைப்பில் வாழ்வது இதன் அடிப்படை காரணமாகும்.எனவே தோட்டங்களை கிராமங்களான மாற்றியமைத்து கிராம கட்டமைப்புக்குள் தோட்டங்களை கொண்டு வர வேண்டும்” என்றார்.

சுதந்திரத்திற்கு பின்னர் மலையக மக்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட நிலையில் மலையக மக்கள் சொல்லொணா துன்ப துயரங்களையும் அனுபவித்து விட்டனர்.இதன் தொடர்ச்சியை இன்றும் அவதானிக்க முடிகின்றது.இந்நிலையில் விசேட கொள்கைத் திட்டம் புதிய அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்தப்படுவது பல்வேறு சாதக விளைவுகளுக்கும் வித்திடுவதாக அமையும்.நிர்வாக அதிகார பரவலாக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு இடம்பெறுதல் வேண்டும்.ஓரு சமூகத்தின் அபிவிருத்தியில் அச்சமூகம்சார்  அரசியல் பிரதிநிதித்துவம் என்பது முக்கியமானதாகும்.மலையக சமூகத்தின் அபிவிருத்தியில்  அரசியல் பிரதிநிதித்துவம் கை கொடுத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில்மலையக மக்களின் சனத்தொகைக்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் முறைமையை சாதகமாக்கிக் கொள்வதோடு அரசியலமைப்பு ரீதியான உறுதிப்பாடுகளும் பிரதிநிதித்துவ உறுதிப்பாட்டிற்கு  அவசியமாகும்.அரசியல் பிரதிநிதித்துவத்தின் வீழ்ச்சி ஆபத்தான நிலைமையினை தோற்றுவிக்க ஏதுவாகும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான முன்னெடுப்புக்கள் முடுக்கி விடப்பட்டுள்ள இந்தச் சூழலில் மலையக அரசியல்வாதிகள் எல்லாம் தெரியும் என்ற மமதையில் இருந்து விடாது, கற்றறிவாளர்களின் பங்களிப்புடன் இதனை சாதகமாக்கிக் கொள்ள முற்படுதல் வேண்டும்.இவர்களின் மமதையான போக்கு ஒரு சமூகத்தை சீரழித்து விடும் என்பதனை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.இதேவேளை அரசுசார்பற்ற நிறுவனங்களும் புதிய அரசியலமைப்பினை மலையக மக்களின் அபிவிருத்தி கருதி சாதகமாக்கிக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அவசியமாகும்.