வடக்கில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை; பாராளுமன்றில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு

சுகாதார உதவியார்கள் பற்றாக்குறைவடக்கில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை; பாராளுமன்றில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு: யாழ் போதனா வைத்தியசாலையில் 657 தாதியர் தேவை உள்ள நிலையில் 573 தாதியர்களே பணியில் உள்ளனர். அவர்களிலும் 50 தாதியர்கள் தினமும் விடுமுறையில் உள்ளனர், மேலும் 73 பேர் இடமாற்றத்தில் உள்ளனர். எனவே 135 புதிய மற்றும் அவசரமான தாதியர் நியமனங்கள் தேவைப்படுவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறையும் காணப்படுவதால் இதனையும் உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை அவர் மேலும் கூறுகையில்,

யுத்தத்திற்கு பின்னர் பாரிய பின்னடைவுடன், மெதுவான அபிவிருத்திகளை எமது பகுதிகள் சந்தித்து வருகின்ற நிலையில் வடக்கின் சுகாதார சேவைகள் குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளில் எமது மக்களுக்கான சுகாதார மருத்துவ சேவைகளை முன்னெடுக்கும் சுகாதார தரப்பினருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வடக்கின் மிகவும் முக்கியமான வைத்தியசாலையாக யாழ் போதனா வைத்தியசாலை உள்ளது, வடக்கிற்கு மட்டும் அல்ல, ஏனைய பகுதிகளுக்கும் இது முக்கியமான வைத்தியசாலை . ஆனால் யாழ் போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் உள்ளன . குறிப்பாக வைத்தியசாலையின் பிரசவ விடுதிக்கான தேவையுள்ளது. தற்போதுள்ள பிரசவ விடுதி மிக மோசமான நிலைமையில் காணப்படுகின்றது. அபிவிருத்தி செய்யாது தற்காலிக ஏற்பாடுகளை மட்டுமே இதில் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் 50 வீதத்திற்கும் அதிகமாக கர்ப்பிணி பெண்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

மேலும் தாதியர் பற்றாக்குறை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆலோசனை வைத்தியர்கள், மருத்துவர்கள் போன்றே தாதியர் தேவையும் அவசியம். இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 657 தாதியர் தேவை இருந்தும் 573 தாதியர்களே பணியில் உள்ளனர். அவர்களிலும் 50 தாதியர்கள் எந்த நேரமும் விடுமுறையில் உள்ளனர், மேலும் 73 பேர் இடமாற்றத்தில் உள்ளனர். எனவே 135 புதிய மற்றும் அவசரமான தாதியர் நியமனங்கள் தேவைப்படுகின்றன . தேவைப்பாடு அடிப்படையில் பார்த்தாலும் கூட 1200 தாதியர்கள் தேவைப்படும், எனவே குறைந்தபட்சம் 300 தாதியர்களையேனும் அதிகரிக்க வேண்டும்.

வைத்தியர்களை பொறுத்தவரை 175 வைத்திய ஆலோசகர்களே உள்ளனர், ஆனால் 300 பேருக்கான வெற்றிடம் உள்ளது. எனவே இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

யாழ் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரையில் யுத்த காலத்தில் தன்னார்வ வைத்திய சேவையாளர்கள் பலர் இருந்த போதிலும் தற்போது வடக்கை பொறுத்தவரையில் 73 வீதமான சுகாதார உதவியாளர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. எனவே இதில் இனியும் காலதாமதம் செய்து நியமனங்களை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கை பொறுத்தவரை 117 வைத்தியசாலைகள் உள்ள போதிலும், இவற்றில் 15 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை. அதேபோல் 41 வைத்தியசாலைகளில் மட்டுமே தாதிய அதிகாரிகள் உள்ளனர். ஏனைய பல குறைபாடுகள் உள்ளன. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், முக்கியமான சில வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல வேண்டும் என வைத்தியர்கள் மற்றும் மக்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் மத்திய அரசின் கீழ் வைத்தியசாலைகள் இயங்கும் நேரத்தில் பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதுடன் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதே அஅந்த விருப்பத்துக்கான காரணம்.

மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளை கைவிட்டு மத்திய அரசின் கீழ் இயங்குவதை வைத்தியசாலைகள் கவனத்தில் கொள்வது நியாயமான செயற்பாடாக நாம் கருதவில்லை. அதேபோல் யாழ் போதனா வைத்தியசாலை மாகாண அதிகாரத்தின் கீழ் இயங்கினாலும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சேவைகள் குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad வடக்கில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை; பாராளுமன்றில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு