அவுஸ்திரேலியாவில் 19 ஆயிரம் அகதிகள் நிரந்தரமாக வசிக்க அனுமதியா?: பின்னணி என்ன?

அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் வரும் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியை வழங்க இருப்பதாக தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

இதன் மூலம் சமூக பாதுகாப்பு உரிமைகள், அவுஸ்திரேலியாவுக்கு வெளியே பயணிப்பதற்கான உரிமை, வெளிநாடுகளில் உள்ள தங்கள் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பதற்கான உரிமை கிடைக்கும். தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள் தங்கள் குடும்பத்தினரை 9 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை பிரிந்திருக்கின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னதாக படகில் சென்று தற்காலிக பாதுகாப்பு விசா மற்றும் பாதுகாப்பான புகலிட (Safe-Haven Enterprise) விசாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அகதிகள் இந்த முடிவின் வாயிலாக பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்காலிக பாதுகாப்பு விசாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிற்கட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், அவுஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் வழக்கறிஞர்கள் மற்றும் சுதந்திர பாராளுமன்ற உறுப்பினர் கைலியா டிங்க் ஆகியோர் இணைப்பு விசாக்களில் நிச்சயத்தன்மையற்ற சூழலில் இருக்கும் மேலும் 12 ஆயிரம் பேர் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கத்தின் போது ஒழிக்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு விசாக்கள், கடந்த 2014ம் ஆண்டு தாராளவாத-தேசிய கூட்டணி அரசாங்கம் அமைந்த போது மீண்டும் கொண்டு வரப்பட்டது. அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுப்பதற்கான முக்கியமான ஒரு கொள்கை முடிவாக ‘தற்காலிக பாதுகாப்பு விசாக்களை’ தாராளவாத அரசாங்கம் அடையாளப்படுத்தி வந்தது.  இந்த நிலையில், கடந்த மே மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி தற்காலிக விசாக்களை மீண்டும் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

அதே சமயம், தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ளவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக இதுவரையில் அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது குறித்து ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறுகிறார் அகதிகள் கவுன்சிலின் தலைமை நிர்வாகி பால் பவர்.