குருந்தூர் மலை விவகாரம்: 23 ஆம் திகதி விசாரணை

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட  விஹாரை கட்டுமானப் பணிகள் தொடர்பிலும், வழக்குத் தொடர்பிலும்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம்  காவல் துறையினரிடம் விளக்கம் கோரியுள்ளது. 

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் 12ஆம் திகதியன்று  ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விஹாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், குருந்தூர்மரை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பில், நேற்று (16) நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

அதன்போது, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அனைத்து நகர்த்தல் பத்திரங்கள், நீதிமன்றம் ஏற்கெனவே, வழங்கிய கட்டளைகளை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விஹாரை தொடர்பிலும்,  இந்த வழக்குத் தொடர்பில், நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை காவல்துறையினர் தொடர்ச்சியாக வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

அந்தவகையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், காவல்துறையினர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான்,  வழக்குத் தொடுனரான காவல்துறையினர், குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு திகதியிட்டுள்ளார்.

இது தொடர்பில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான  எஸ்.தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற வழக்கு, குருந்தூர்மலை ஆதி ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சார்ந்த மக்களால்  நகர்த்தல் பத்திரம் அழைக்கப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே சமர்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 13.09.2018 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், மிகத் தெளிவான கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அக்கட்டளையிலே, குருந்தூர்மலைப் பிரதேசம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வருகின்ற பிரதேசம் எனவும், அப்பிரதேசத்திலே புதிதாக எவ்விதமான கட்டடங்களையும் அமைக்க முடியாது எனவும் அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பரம்பரையாக வழிபாடு செய்கின்ற சைவர்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் எனவும், அதனை யாராலும் தடுக்க முடியாது. எனவும் அத்தோடு ஏனைய புதிய கட்டடங்களை அமைக்கும், விஹாரைகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களை கைதுசெய்யலாம் எனவும் கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

அந்தக் கட்டளையினை மீறியே தற்போது அங்கு புதிதாக ஒரு விஹாரை அமைக்கப்பட்டு, அந்தவிஹைரையில் 12.06.2022அன்று, விசேட பூசை வழிபாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச்சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்ந நிகழ்வுளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இன்றையதினம் (நேற்று) இருதரப்பு வாதங்களையும் ஆழ்ந்து அவதானித்த நீதவான், வழங்குத் தொடுனர் தரப்பான காவல்துறையினர் இந்த வழக்குத் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நீதிமன்றிலே கூறுவதற்காக, இந்த வழக்கு விசாரணைகளை இந்தமாதம் 23 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார்.

Tamil News