கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூல விவகாரம்-இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

IMG 0520 1 கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூல விவகாரம்-இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கைஜோன் கொத்தலாவல பல்கலைக் கழக சட்ட மூலத்தினை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் கிழித்தெறிந்து விட்டு பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பங்களை இணையவழி ஊடாக மேற் கொள்ளும் ஆசிரியர்களும் அந்த செயற்பாடுகளிலிருந்து இன்று முதல் விலகிக் கொள்வதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்.உதயரூபன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 08ஆம் திகதி பாராளு மன்றத்திற்கு முன்பாக நடை பெற்ற ஜோன் கொத்தலாவலை சட்ட மூலத்திற்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உட்பட 30பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

இந்த அடக்கு முறை செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சகல சங்கங்களும் கண்டனம் தெரிவித்து அவரை விடுதலைக்கான அழுத்தங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட அனைத்து சங்கஙக்ளும் இன்றிலிருந்து இணையவழி மூலமாக சுயமாக கற்பித்தல் செயற்பாடுகளை இலவசமாக முன்னெடுக்கும் ஆசிரியர்களும் பிராந்திய கற்கை நிலையங்களில் இருந்தும் அதன் செயற்பாடு களிலிருந்தும் உயர்தரப் பரீட்சைக்காக இணையவழி மூலமாக மாணவர்களை விண்ணபிக்கச் செய்யும் செயற்பாடுகளை மேற் கொண்டு வந்த ஆசிரியர்களும் அந்த பணிகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

இலவச கல்வியை வலுப்பத்த வேண்டும். அந்த இலவச கல்வி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடன் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதுதான் 30க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இன்று போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களும் வெளியில் அரசியல்வாதிகளாக திரிந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைய ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் இன்று கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்திற்கான முழுப் பொறுப்பினையும் இந்த சட்ட மூலத்திற்கான முழுப் பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். புனிதமான அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்து அமைச்சராக பதவியேற்ற இந்த ஜி.எல்.பீரிஸ், இந்த சட்ட மூலத்தினை பாராளுமன்றத்தில் கிழித்தெறிந்து விட்டு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

1994ஆம் ஆண்டிலிருந்து பொருத்தமான சம்பளம் இல்லாமல் தமது கடமைகளை சிறப்பாக முன்னெடுத்து வரும் அதிபர், ஆசிரியர்களின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும், அவர்களின் உரிமையினை முறியடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த கைதுகள் நடை பெறுகின்றன.

கடந்த காலத்தில் சம்பள அதிகரிப்பினை கோரி பல இடங்களில் போராட்டங்களை நடாத்தினோம். பெரும்பாலான அதிபர்கள், ஆசிரியர்கள் இந்த நியாயமான போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த காரணத்தினால் அதனைக் கண்டு இந்த அரசாங்கம் அச்சமடைந்தது.

இக்கால கட்டத்தில் மாணவர்களுக்கு எந்த கல்வி நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத இந்த அரசாங்கம், கல்விக் கொள்கையில் தோல்வியடைந்த இந்த அரசாங்கம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளை கைது செய்து விட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கையினை முறியடிக்க வேண்டும் என்ற வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.

ஜோன் கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூலம் இந்த நாட்டின் அரசியல் அமைப்புக்கும் இறையாண்மைக்கும் சவாலாகயிருக்கின்றது. இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சகலரும் இதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்கால எமது சந்ததிக்கு சவாலகவுள்ள இந்த சட்ட மூலத்திற்கு எதிராகவே இன்று நாங்கள் வீதிகளிலிறங்கி போராடி வருகின்றோம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறுகின்றார்கள். சட்டத்தினை மதிக்கின்ற சமூகம் ஒன்றை உருவாக்குவோம் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு இருந்தால் இந்த நாட்டின் அரசியலமைப்பினை, இறையாண்மையினை மதித்து ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடாத்தியவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூல விவகாரம்-இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை