சிட்னியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது

மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சனிக்கிழமை 27-11-2021 அன்று மாலை 3 மணி வரை தொடர்மழையாக இருந்தபோதும், மழைக்குள் நின்று தயார்ப்படுத்தலைச் செய்த ஏற்பாட்டாளர்களின் தொடர் ஒத்துழைப்புடன் மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது.

பொதுச்சுடரினை 2ஆம் லெப்டினன்ட் நித்தியா அவர்களின் சகோதரி திருமதி. யசோதினி இரட்ணகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடியை தமிழ்ச் செயற்பாட்டாளர் திரு. சுஜன் செல்வேந்திரன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் செயலாளர் ரிஷிகேசன் சிவபாலசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சிட்னிப் பொறுப்பாளர் திரு. ஜனகன் சிவராமலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரைக் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் சகோதரர் திரு. ஐங்கரன் அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உரித்துடையோரும் 240 கல்லறைகளுக்கு முன்னே கூடிநின்று ஈகைச்சுடர்கள் ஏற்றினர்.

அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாகச் சென்று கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து சிறார்கள், இளையோர்கள், பெரியவர்கள் இணைந்து கலைநிகழ்வு ஒன்றை வழங்கியிருந்தனர். குறுகிய தயார்படுத்தலுடன் மேற்கொண்ட இந்நிகழ்வில் மாவீரர் புகழ்பாடுவோம் என்ற பாடலுக்கான நடனம், வீழமாட்டோம் என்ற பாடலுக்கான நடனம் தமிழர் கலைகளை இணைக்கும் சிலம்பம், பறை என்பன இணைந்ததாக இருந்தது.

நிறைவாக உறுதியேற்றலுடன் தேசியக் கொடிகள் இறக்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வை திருமதி. நிதர்சினி செல்வகுமார், யாழவன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர். இந்நிகழ்வுக்கு Hugh McDermott, State Member for Prospect அவர்கள் மாவீரர் நாள் தொடர்பான தனது உரையை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவீரர் நாள் வெளியீடுகள் விற்கப்பட்டதுடன், இவ்வாண்டு மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களைத் தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு காலநிலை மோசமாக இருந்தபோதும்  3000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad  சிட்னியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு