தொடரும் அபகரிப்பு:கிண்ணியா வெந்நீர் ஊற்று பெளத்த இடிபாடுகளைக் கொண்ட இடமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம்

21 61c1dd88d4417 தொடரும் அபகரிப்பு:கிண்ணியா வெந்நீர் ஊற்று பெளத்த இடிபாடுகளைக் கொண்ட இடமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம்

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக போற்றப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிகள் தற்போது, பௌத்த மயமாக்கல் பகுதியாக மாற்றப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் கன்னியா வெந்நீர் ஊற்று, தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, 2011 ஒக்டோபர் 9ஆம் திகதியிட்ட அரச வர்த்தமானி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை, திருகோணமலை மாவட்ட செயலகம் என்பன கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களம் தலையிட்டு கன்னியா வெந்நீர் ஊற்றின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை, திணைக்களத்தின் கணக்கின் ஊடாக அரச வருமானத்துடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் திருகோணமலை பிரதேச தொல்பொருள் திணைக்களம் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.