கனடாவின் நீதி அமைச்சராக யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று (14) பதவியேற்றார்.
அதனை தொடர்ந்து, கனடாவின் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் – கனேடியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
கரி ஆனந்தசங்கரி, இலங்கை தமிழ் அரசியல்வாதியான, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியின் இளைய மகன் ஆவார். தனது 13 வயதிலே கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற அவர், அங்கு தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், இளைஞர்கள் சேவை நிலையமொன்றை தொடங்கினார்.
அரசியலுக்கு வரும் முன் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், அங்குள்ள கனேடிய தமிழர் வர்த்தக சபை, கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் கனேடிய தமிழ் இளைஞர் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல அமைப்புகளுடன் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில், ஒன்டாரியோ மாகாணத்தில் இரண்டாவது முறையாக கரி ஆனந்தசங்கரி போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.