Home செய்திகள் இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம்...

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன்

கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“2009ம் ஆண்டு இந்த மண்ணிலே மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்ச நாளாகிய மே 18 நினைவு நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு ஆயத்தமாகி வருகின்ற இந்த வேளை, எமது உயிரோடும் உள்ளத்தோடும் இணைந்துள்ள இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு மிக முக்கியமானது.

இந்த கஞ்சியின் பின்னால் இருக்கக்கூடிய உணர்வுகளையும் வலிகளையும் இந்த இடத்தில் பேசுவது மிக முக்கியமானது. 2009ம் ஆண்டு இதே காலப்பகுதியில் எங்களுடைய மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நாங்கள் நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

கையெது மெய்யெது என்று தெரியாத சதை குவியலுக்குள்ளே எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று ஒவ்வொரு பிணங்களாக பிரட்டி பார்த்ததை நாங்கள் நினைத்து பார்க்கின்றோம்.

போர் பாதுகாப்பு வலயங்கள் என சொல்லி அங்கு போகவிட்டு பல்குழல் ஏவுகணைகளாலே தாக்கி, எங்களுடைய உடல்களை சிதைத்து, வெறும் பக்கோ இயந்திரங்களால் வெட்டி புதைத்த காலங்களை நினைத்து பார்க்கின்றோம்.

இரசாயன குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் பாவித்து எங்களுடைய இனத்தை அழிப்பு செய்த நாட்களை நினைத்து பார்க்கின்றோம்.

நன்றி- IBC Tamil

Exit mobile version