Home செய்திகள் காபூல் விமான நிலையத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

காபூல் விமான நிலையம் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

காபூல் விமான நிலையம் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை; பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்தை விட்டுத் தள்ளிச் செல்லுமாறும், பயணம் செய்ய வேண்டாம் எனவும் தங்கள் நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா, பிரிட்டன் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

காபூல் நகரம் தாலிபன்களின் வசமான பிறகு 10 நாள்களில் சுமார் 82 ஆயிரம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தாலிபன்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி வரும் 31–ஆம் திகதிக்குள் படைகள் முற்றிலுமாக வெளியேற வேண்டும். அதனால் மீட்புப் பணிகளை நாடுகள் துரிதப்படுத்தியுள்ளன.

காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என தாலிபன்கள் அறிவித்துவிட்டனர். எனினும் ஆகஸ்ட் 31-ஆம் திகதிக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்களை அனுமதிப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் மக்களுக்கு அமெரிக்கா நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்தது. அதன்படி அபே வாயில், கிழக்கு வாயில், வடக்கு வாயில் ஆகிய பகுதிகளில் காத்திருக்கும் மக்கள் உடனடியாக அப்பால் சென்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக இதேபோன்றதொரு அறிவுறுத்தலை பிரிட்டன் வெளியிட்டது. அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாகச் சென்றுவிடுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை இன்னும் நிச்சயமற்றதாகவே இருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் கூறியது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் அதன் எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது.

எனினும் எந்தவகை பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது பற்றி அமெரிக்காவோ, பிரிட்டனோ எந்தவிதமான கூடுதல் தகவலையும் கொடுக்கவில்லை.

எனினும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையின்போது, “ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து கூடிய விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

நன்றி – பிபிசி

Exit mobile version