Tamil News
Home செய்திகள் இந்தியா-சக கைதியை கொன்றதற்காக 15 சிறைவாசிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

இந்தியா-சக கைதியை கொன்றதற்காக 15 சிறைவாசிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநில சிறைச்சாலை ஒன்றில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி இறந்த வழக்கில், அப்போது கொல்லப்பட்டவருடன் சிறையில் இருந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது அம்மாநில நீதிமன்றம்.

ஜார்கண்ட் கிழக்கு சிங்பும் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாம்ஷெட்பூர் சிறையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனோஜ் குமார் சிங் என்பவரைக் கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜார்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாம்ஷெட்பூரில் காகிதி மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இருபிரிவினராகப் பிரிந்து அவர்கள் ஒருவர் மீது ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் மனோஜ் குமார் சிங் என்ற கைதி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மனோஜ் குமார் சிங் உயிரிழந்தார்.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை, குற்ற சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தன. இந்த வழக்கு மாவட்ட கூடுதல் நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ராஜேந்திர குமார் சின்கா நேற்று தீர்ப்பளித்த போது, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, மேலும் 7 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து  உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version