ஜெய்சங்கரின் கொழும்பு விஜய எதிரொலி; இலங்கையில் அதிகரிக்கும் இந்திய ஆதிக்கம் | அகிலன்

இந்திய ஆதிக்கம்அகிலன்

இலங்கையில் அதிகரிக்கும் இந்திய ஆதிக்கம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கொழும்பு விஜயமும், அதிரடியாக அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளும் இலங்கையில் இதுவரை காலமும் இருந்த சீனாவின் மேலாதிக்க நிலையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஜெய்சங்கர் கொழும்பில் நின்ற போது ஆறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார். இதில் இரண்டு உடன்படிக்கைகள் முக்கியமானவை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இழந்து போன மேலாதிக்க நிலையை மீண்டும் நிலைநாட்டுவதை இலக்காகக் கொண்டதாகவே அந்த இரண்டும் உள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சராக கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியமித்த போது அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள். ஆச்சரியத்துக்குக் காரணம் – வழமையை மீறி, அரசியல்வாதி அல்லாத ஒருவரை – அதாவது இராஜதந்திரி ஒருவரை வெளிவிவகார அமைச்சராக இந்தியப் பிரதமர் நியமித்ததுதான். அரசியல் கட்சி ஒன்றில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் ஒருவரை அமைச்சராக நியமிக்கும் வழமைதான் இந்தியாவில் இருந்துள்ளது. அந்த மரபை மீறி மோடி செயற்பட்டபோது, முக்கியமான காய்நகர்த்தல் ஒன்றுக்கு அவர் தயாராகின்றார் என்பது எதிர்பார்க்கப்பட்டது.

சர்வதேச அரங்கில் – குறிப்பாக தெற்காசியாவில் இந்தியா எதிர்கொள்ளும் பின்னடைவுகளை முடிவுக்குக் கொண்டுவரக் கூடியவராக ஜெய்சங்கர் இருப்பார் என மோடி கருதியமைக்கு காரணம் இருந்தது. குஜாராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது அங்கு இடம்பெற்ற முஸ்லிம் மக்களின் படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் மோடியின் பெயர் சேர்க்கப்பட்டது. மோடி பிரதமராக வந்த பின்னரும் அது நீக்கப்படவில்லை. சர்வதேச அரங்கில் மோடிக்கு பெரும் சங்கடத்தைக் கொடுக்கும் ஒரு விடயமாக அது இருந்தது.

ஜெய்சங்கரை வெளிவிவகார அமைச்சராக நியமித்த மோடி, அமெரிக்க விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். சில மாதங்களிலேயே அமெரிக்காவின் தடைப்பட்டியலில் இருந்து மோடியின் பெயர் நீக்கப்பட்டது. அமெரிக்கா வருமாறு மோடிக்கு அழைப்பும் கிடைத்தது. அங்கு மோடிக்கு பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பது மேலதிக தகவல்.  ஜெய்சங்கரின் இராஜதந்திர திறமையில் மோடி அதீத நம்பிக்கை வைப்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு காரணம். ஒரு இராஜதந்திரியான ஜெய்சங்கரை மரபை மீறி அமைச்சராக நியமிப்பது என மோடி துணிந்தார்.

இந்திய ஆதிக்கம்அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்ட நிலையில், இந்தியா எதிர்கொண்ட பிரதான பிரச்சினை அதன் கொல்லைப் புறத்திலுள்ள இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதுதான். இது எல்லை மிறிச் செல்கின்றது என்பது இந்தியாவுக்குத் தெரிந்திருந்தது, வெளிவிவகார அமைச்சின் செயலாளராக மட்டுமன்றி, இலங்கையில் இந்தியாவின் உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றிய அனுபவம் ஜெயசங்கருக்கு உள்ளது. இலங்கை அரசியலின் பலங்கள் பலவீனங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி!

ஜெய்சங்கரின் வருகையின் போது கைச்சாத்தான அந்த ஆறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

  1. இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை அமுல்படுத்துதல்.
  2. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.
  3. யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் கலப்பு மின்சக்தித் திட்டங்களை அமுல்படுத்துதல்.
  4. இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை நல்குதல்.
  5. காலி மாவட்டத்திலுள்ள இருநூறு பாடசாலைகளில் பிரத்தியேகமான கல்வி மென்பொருளுடன் கூடிய ஸ்மார்ட் அட்டைகளோடு நவீன கணினி ஆய்வுகூடங்களை ஸ்தாபித்தல்.
  6. வெளிநாட்டுச் சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

இந்திய ஆதிக்கம்இலங்கையின் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு வேகமாகக் காய் நகர்த்திய இந்தியா, சீனாவுக்குக் கொடுக்கப்பட்ட பல திட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் இப்பொது கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக ஜெய்சங்கரின் கொழும்பு விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளையும் இந்திய நிறுவனத்துக்குக் கொடுப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி.

திங்கட்கிழமை இலங்கை தலைநகரில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் எம்.ஆர்.சி.சி.க்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஒன்று. அதாவது, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரோனிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம், நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) இலங்கையில் அமைக்க வழிவகை செய்வதாகும்.

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது, இந்திய அரசாங்கத்தின் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியோடு இலங்கையில் நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் இந்திய உளவு விமானங்கள் இலங்கை வானத்தைப் பயன்படுத்தும். இலங்கை தன்னுடைய கடல் மற்றும் வான் பாதுகாப்பை இந்தியாவுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதாகக் கருதலாம். கடற்பரப்பில் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்களின் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்துக்குள் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இந்த நிலையம் மிகவும் அவசியம். இதன்மூலம் இலங்கையின் கடலாதிக்கத்தை இந்தியா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

யாழ். தீவுப் பகுதி மின் உற்பத்தி தொடர்பான உடன்படிக்கையை முன்பே இலங்கை சீனாவுடன் மேற்கொண்டிருந்தது. இப்போது சீனாவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, இந்தியாவிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் சீனா சீற்றமடைந்திருக்கிறது. நான்காவது உடன்படிக்கையின் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் இந்தியா எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அணுகலாம்.

தெற்கில் காலி, மட்டக்களப்பு, திருகோணமலை கிழக்குக் கடற்கரையில் மற்றும் வடக்கில் முள்ளிக்குளம் மற்றும் பருத்தித்துறை ஆகிய ஏழு துணைப் பிரிவுகளைக் கொண்ட  எம்.ஆர்.சி.சி வலையமைப்பை இலங்கைக் கடற்கரை முழுவதும் கடற்படைத் தளங்களில் அமைக்கும். இது முக்கியமாக தற்போது இல்லாத இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கும். இதன் மூலம் இலங்கை கடற்பகுதியில் அதிகமாகவுள்ள சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா சமப்படுத்தவுள்ளது. அல்லது, அதற்கு மேலாக தமது ஆதிக்கத்தை நிலை நாட்டவுள்ளது.

இதற்கு முன்னரே திருமலை, சம்பூரில் சூரிய சக்தி மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையை இந்தியா செய்திருந்தது. அதனைவிட, சீனன்குடா எண்ணெய்க் குதங்களுக்கான குத்தகையையும் இந்தியா புதுப்பித்துக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் வடக்கு – கிழக்கு இந்தியாவின் ஆதிக்கத்தை விட்டுச் செல்ல முடியாது என்பதை இந்தியா உறுதிப்படுத்துகின்றது.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைப் பயன் படுத்தித்தான் இந்தியா இதற்காக காய் நகர்த்தியது. இலங்கையின் பொருளாதாரச் சீர்குலைவைச் சீரமைக்க இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், இந்திய எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் தூண்டிவிடப்படலாம் என்பதையிட்டும் இந்தியா அவதானமாக உள்ளது.

தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்காக யாழ். கலாசார நிலையம் அமைக்கப் பட்டது. இந்த மையம் ‘நல்லிணக்கத்’ திட்டமாக கருதப்பட்டு இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டது. மறுபுறம், சிங்கள மக்களின் மனதை வெல்வதற்காக இலங்கையில் உள்ள பௌத்த தலங்களை பராமரிக்க 15 மில்லியன் டொலர்களை இந்தியா மானியமாக வழங்குகிறது.

மக்கள் மனதை வெல்வதற்காக இதனைச் செய்துகொண்டு, இலங்கையை கடன் பொறியிலிருந்து மீட்பதற்காக மேலும் கடன்களை இந்தியா  வழங்குகின்றது. இவ்வாறு வழங்கப்படும் கடன்கள் இந்திய ஆதிக்கத்திலிருந்து மீளமுடியாத நிலையை இலங்கைக்கு ஏற்படுத்தும் என்பது இந்தியாவுக்குத் தெரியும். அதேவேளை கொழும்புத் துறைமுக நகர் சீனாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பினும், இந்தியாவின் புதிய உடன்படிக்கைகளின் மூலம் சீன ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

Tamil News