Tamil News
Home செய்திகள் யாழ்.’வென்மேரி’ அறக்கட்டளை விருதுகள்: மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

யாழ்.’வென்மேரி’ அறக்கட்டளை விருதுகள்: மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடைபெற்ற ‘வென்மேரி விருதுகள்” விழாவில் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் அவர்கள் ஊடகத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

“வென்மேரி அறக்கட்டளை”யின் முதலாவது விருதுவிழாவான இன்றைய நிகழ்வு யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

“தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் விழா” என்ற மகுடத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் தற்போதைய போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

பேராளுமை விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், பல்துறைசார் ஆளுமை விருதுகள், இளையோர் ஊக்குவிப்பு விருதுகள் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

பேராசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சாதனையாளர்களான இளையோர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் ஊடகத்துறையில் உயிரையும் பணயம் வைத்து நான்கு தசாப்தங்களுக்கு மேலாக போரின் மையப் புள்ளியிலிருந்து துணிச்சலுடன்  பணிபுரிந்த மாணிக்கவாசகம்  கௌரவிக்கப்பட்டமை முக்கியமானதாகும்.

தனது பெற்றோர் வெனிசிலாஸ் – மேரி ஆகிய இருவரது பெயரையும் இணைத்து அவர்களின் நினைவாக ‘வென்மேரி’ என்ற பெயரிலான அறக்கட்டளையை அவர்களது புதல்வராகிய வெனிசிலாஸ் அனுரா நிறுவிச் செயற்படுத்தி வருகின்றனர்.

பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களின் தலைமையில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் இந்த அறக்கட்டளைக் குழுவில் உறுப்பினர்களாக இணைந்து செயற்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

கவிஞர் சோ.பத்மநாதன், ஆடற் கலைஞர் வேல் ஆனந்தன், பண்டிதர் வீ.பரந்தாமன், முனைவர் மனோண்மணி சண்முகதாஸ், எழுத்தாளர் ஐ.சாந்தன், ஓவியர் வை.சிவசுப்பிரமணியம் (ரமணி), இசைவாணர எம்.கண்ணன், கவிஞர் பாலமுனை பாறுக், உளவளச் செயற்பாட்டாளரும் குழந்தை இலக்கியப் படைப்பாளருமாகிய அருட்திரு அன்புராசா அடிகள் ஆகியோர் விருது பெற்றவர்களில் சிலராவர்.

நிகழ்வின் இறுதியில் பேராசிரியர் மகேஸ்வரன், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கள், மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா, மற்றும் பாரதி ஆகியோருடன் விருதுபெற்ற மாணிக்கவாசகம்  அவர்கள்.

Exit mobile version