Home செய்திகள் யாழ்ப்பாணம்: தொல்பொருள் இராஜாங்க அமைச்சருக்கு மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம்: தொல்பொருள் இராஜாங்க அமைச்சருக்கு மக்கள் எதிர்ப்பு

தொல்பொருள் இராஜாங்க அமைச்சருக்கு மக்கள் எதிர்ப்பு

யாழ். காரைநகர் பகுதியில் உள்ள வேரம்பிட்டி கிராமத்தில் ஒரு தொல்பொருள் சின்னம் இருக்கின்றது எனக் கூறி இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அந்த இடத்துக்கு வருகை தந்தமையால் அப்பகுதி மக்கள் கூடி கடும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் வேரம்பிட்டிப் பகுதிக்கும் சென்றிருந்தார்.  அங்கு ஏற்கனவே தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன என்று தொல்பொருள் திணைக்களத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தை அவர் பார்வையிடச் சென்றார்.

இந்தத் தகவல் வெளியானதால் அப்பகுதியில் குறித்த தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்ட காணியின் உரிமையாளர் மற்றும் பொது மக்கள் என 300 வரையான மக்கள் கூடி எதிர்ப்பு நடவடிக்கையை மேற் கொண்டனர். இதன்போது அவ்விடத்தில் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் நேற்று மாலை 4 மணியளவில் குறித்த  இடத்துக்கு இராஜாங்க அமைச்சர் வருகை தந்தபோது தொல்பொருள் இராஜாங்க அமைச்சருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குழப்ப நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பேச்சு நடத்தினர். இதன்போது காணி உரிமையாளர் எனத் தெரிவித்து அதன் பத்திரத்தை குறித்த நபர் வழங்கிய வேளை அதனை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த இடம் தனக்கு உரித்தானது என ஒரு வைத்தியர் ஏற்கனவே காணிப் பத்திரத்தை வழங்கியுள்ளார் எனத் தெரிவித்தனர்.

இறுதியில் இரு பத்திரங்களையும் பரீட்சித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த அதிகாரிகள், தொல்லியல் தொடர்பான அடையாளங்களையும் பார்வையிட்டுச் சென்றனர்.

Exit mobile version