பொருளாதார நெருக்கடியால் கேள்விக்குறியாகும் யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம்

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பன ஒருபுறம் மக்களை பெரித்தும் பாதித்து வரும் நிலையில் அதிகரித்த விலையில்   பொருட்களை வாங்குவதற்கு வருமானத்தை ஈட்டும் தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள முடக்கநிலையே இவ்வாறு யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையானது குறிப்பாக மண்ணெண்ணெய் தட்டுப்பாடு விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகளை வெகுவாக பாதித்துள்ளது. யாழ். குடாநாட்டில் தற்போது புகையிலை மற்றும் சின்ன வெங்காயம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக போதியளவு நீர் இறைக்க முடியாதுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளது.

இதனைவிட கடற்றொழில் நடவடிக்கை முற்றாக முடங்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. தினமும் குறைந்தது 20 – 30 லீட்டர் மண்ணெண்ணெய் இருந்தால்தான் கடலுக்கு செல்லமுடியம் என்ற நிலையில் தற்போதைய தட்டுப்பாட்டு நிலை கடற்றொழிலை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடற்றொழில் சார்ந்த மீனவ குடும்பங்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருமானமின்றி தவிக்கும் நிலையேற்பட்டுள்ளது. இந்நிலையானது தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு ஈடுகொடுக்க முடியாத அவலநிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.