Tamil News
Home செய்திகள் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மலையக தியாகிகள் நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மலையக தியாகிகள் நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் நடைபெற்றது.

மலையகத் தமிழர்களுக்கான தொழிற்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளும் குறித்த நினைவேந்தலில் நினைவுகூரப்பட்டதோடு 1930க்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்கு பற்றி உயிர் நீத்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் “மலையக தியாகிகள்” என அடையாளபடுத்துகின்ற நிலையில் பெருந்தோட்டதொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தில் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையின் பேரில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு தனது உயிரை தியாகம் செய்த முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகம் ஜனவரி 10 ஆம் திகதி நடந்தது.

மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த இத்திகதி மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு கடந்த 2019 டிசம்பர் 15ஆம் திகதி தலவாக்கலை டெவனில் நடைபெற்ற நினைவேந்தலின் போது தீர்மானிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு மஸ்கெலியாவில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு பத்தனை சந்ததியில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு கொட்டக்கலை கொமர்சியல் பகுதியில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மையப்படுத்தியே குறித்த நினைவேந்தல் யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது மலையக வாழ மக்களின் அறப்போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுருவ படத்திற்க்கு ஈகைசுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இதன்பொழுது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக மாணவர் ஒன்றியத்தின்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version