Tamil News
Home செய்திகள் பாகிஸ்தான் தொழில்துறைக்கு இது ஒரு இருண்ட காலம்-வேலை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள்

பாகிஸ்தான் தொழில்துறைக்கு இது ஒரு இருண்ட காலம்-வேலை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள்

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மின்வெட்டு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி எதிராலியாக அந்நாட்டு உற்பத்தித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் தேசிய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நசிர் மன்சூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாளிதழான தி நியூஸ் இன்டர்நேஷ்னலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”பாகிஸ்தானில் உற்பத்தித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குறைந்தபட்சம் 10 இலட்சம் முறைசாரா தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜவுளி துறையில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள்.

பணியில் இருந்து விடுவிக்கப்படுபவர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்பு நிதியும் கிடைக்க வாய்ப்பில்லை. இது அவர்களது எதிர்காலத்தை மிகப் பெரிய அளவில் கேள்விக்குள்ளாக்கும். பாகிஸ்தான் தொழில்துறைக்கு இது ஒரு இருண்ட காலம். நிரந்தர தொழிலாளர்களுக்கு சட்டப்படி பல்வேறு நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகின்றன.

அதேநேரத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதன் காரணமாக, நிரந்தரத் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவார்கள். ஏற்கனவே, பல்வேறு நிறுவனங்கள் தற்காலிக பணியாளர்களுக்கு மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகின்றன” என நசிர் மன்சூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் இர்பான் ஷேக்கும், இதே கருத்தை தெரிவித்துள்ளார். பண நெருக்கடி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை ஏற்கனவே நிறுத்திவிட்டதாகவும், அவற்றில் பணியாற்றியவர்கள் வேலை இன்றி தவிப்பதாகவும், இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்கு நிலைமை மிகவும் மோசமானதாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி துறையில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version